பள்ளி மாணவர்களுக்கு ஆசானாக மாறிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாடம் நடத்தினார்

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திர வித்தியாலயா பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்களுடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று கலந்துரையாடினார். படம்: பிடிஐ.
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திர வித்தியாலயா பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்களுடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று கலந்துரையாடினார். படம்: பிடிஐ.
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புவி வெப்பமடைதலின் தாக்கம், தண்ணீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பாடங்களை மகிழ்வுடன் நடத்தினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.

கடந்த 2022 ஜூலை 25-ம் தேதி நாட்டின் குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பொறுப்பேற்றார். இதன்மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவர் என்ற வரலாற்றைப் படைத்தார். நேற்றுடன் அவர் குடியரசு தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திர வித்தியாலயா பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். தொடக்கத்தில் மாணவர்களின் எதிர்கால கனவு, அவர்களுக்கு பிடித்தமான பாடப்பிரிவுகள் பற்றி கேட்டறிந்தார்.

அதையடுத்து மாணவர்களிடம் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது: நாம் நிறைய செடிகளை நட்டுமரம் வளர்க்க வேண்டும். மழைநீர்சேகரிப்பு திட்டத்தின் வழியாக தண்ணீர் வீணாவதை தடுத்து, நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஒரு செடி நட்டு அதை வளர்த்து வாருங்கள். உங்களுடன் கலந்துரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. உங்களிடமிருந்து நிறைய கற்றறியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. புவி வெப்பமடைதலின் தாக்கம் குறித்த விழிப்புணர்வுடன் 9-ம் வகுப்பு படிக்கும்போதே நீங்கள் இருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் வளர்ந்து பெரிய மனிதர்களாகும்போது புவி வெப்பமடைதல் சிக்கலின் வீரியம் நிச்சயம் குறைந்துவிடும் என்கிற நம்பிக்கை எனக்குப் பிறந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in