

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் தற்போதைய தார் எனும் தாரா பகுதியை மன்னன் போஜ் ஆட்சி செய்தார்.12-ம் நூற்றாண்டில் இவர் போஜ்சாலாவில் ஒரு சரஸ்வதி கோயிலைஅமைத்து அதில் வேத பாடசாலையும் தொடங்கியுள்ளார்.
இப்பகுதியை போரில் கைப்பற்றிய முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், போஜ்சாலாவை மசூதியாக மாற்றியதாகப் புகார் உள்ளது. இதனால் அயோத்தி, வாராணசி மற்றும் மதுராவை போல் போஜ்சாலா தொடர்பாகவும் ஓர் உரிமைப் பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. போஜ்சாலாவில் கல் தூண்களால் ஆன வரலாற்று மண்டபம் உள்ளது. இதைஇந்துக்கள் வாக்தேவி (சரஸ்வதி) கோயில் எனவும் முஸ்லிம்கள் கமால் மவுலானா மசூதி என்றும் கூறி வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு அதிகரித்த பிரச்சினையால், போஜ்சாலாவில் இரு தரப்பினரையும் அனுமதிக்காமல், இந்தியதொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.
பிறகு கடந்த 2003, ஏப்ரல் 7-ல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளூர் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தொழுகைக்கு அனுமதி அளித்தது. இந்துக்களுக்கும் அதே இடத்தில் செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏஎஸ்ஐ-யின் இந்த உத்தரவை எதிர்த்து ம.பி.யின் இந்தூர் உயர் நீதிமன்ற கிளையில் ’நீதிக்கான இந்து முன்னணி’ எனும் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை தொடர்ந்து விசாரிக்க, கடந்த ஏப்ரல் 1-ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. எனினும் போஜ்சாலாவில் கள ஆய்வு நடத்த மார்ச் 11-ல் பிறப்பித்த உத்தரவு குறித்துஉச்ச நீதிமன்றம் எதுவும் கூறவில்லை. எனவே, மத்திய அரசின்ஏஎஸ்ஐ ஆய்வாளர்கள் கடந்த மார்ச் 22 முதல் போஜ்சாலாவில் கள ஆய்வு நடத்தினர். இதையடுத்து ஜுலை 15-ல் இந்தூர் உயர் நீதிமன்றக் கிளையில் சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இந்த ஆய்வின்போது இந்து மற்றும் முஸ்லிம்கள் தரப்பினர் பார்வையாளர்களாக இருந்தனர். ஜிபிஎஸ், ரேடார் உதவியாலும் கள ஆய்வு நடத்தப்பட்டது. போஜ்சாலாவில் கிருஷ்ணர், சிவன், பிரம்மன், அனுமன், விநாயகர், பைரவநாத் உள்ளிட்ட 37 இந்துகடவுள்களின் சிலைகள் கிடைத்துள்ளன. இதனுள் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் பலவும் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. இத்துடன் ஜெயின் சமூகத்தினர் வணங்கும் தீர்த்தங்கரர்கள் உள்ளிட்ட பல சிலைகளும், சிற்பங்களும் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.
இதன் அடிப்படையில் போஜ்சாலா மீது ஜெயின் சமூகத்தினரும் உரிமை கோரியுள்ளனர். இதனுள் இருந்த சரஸ்வதி சிலையானது தாங்கள் வணங்கும் அம்பிகா தேவி சிலை எனவும் ஜெயினர்கள் வாதிடுகின்றனர். இவற்றை ஆதாரமாக குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற வழக்கில் ஜெயினர்களும் ஒரு மனு தாக்கல் செய்துஉள்ளனர்.