Published : 26 Jul 2024 05:27 AM
Last Updated : 26 Jul 2024 05:27 AM
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி ஆயோக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியும் புறக்கணிக்கிறார்.
மக்களவையில் 2024-25-ம்நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்தசெவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இதில் ஆந்திரா மற்றும் பிஹாருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து மற்ற மாநிலங்களை பாஜகதலைமையிலான அரசு புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்கள் இல்லாதாதால் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நாளை (ஜூலை 27) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முதலாக அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் ஆளும் 3 மாநிலங்களின் முதல்வர்களான கர்நாடகாவின் சித்தராமையா, தெலங்கானாவின் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேசத்தின் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோரும் இதே அறிவிப்பை வெளியிட்டனர்.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் நேற்று கூறும்போது, “மத்திய பட்ஜெட்டில் பஞ்சாப் தொடர்பாகவும் எங்கள் விவசாயிகள் தொடர்பாகவும் எந்த அறிவிப்பும் இல்லை. எனவே நிதி ஆயோக் கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம்” என்றார்.
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றுடெல்லி புறப்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் டெல்லி செல்லவில்லை. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி எப்போது செல்வார், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்பது நாளை (இன்று) தெரியும் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT