

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மாற்று நிலம்ஒதுக்கிய விவகாரத்தை கண்டித்து பாஜக, மஜத எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் சட்டப்பேரவையில் விடிய, விடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு கழகம்சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் விருப்பப்படி மைசூரு விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்தது. இதில் ரூ.3,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா குற்றம்சாட்டியுள்ளார்.
இதை கண்டித்து பாஜக, மஜத எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாஜக, மஜத எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகாதலைமையில் நேற்று முன்தினம் இரவு பேரவைக்கு படுக்கை, தலையணை, போர்வையுடன் வந்தனர். இரவு உணவை அவையில்சாப்பிட்ட பின்னர் தர்ணாவை தொடங்கினர். அவையின் மையப்பகுதியில் அமர்ந்து முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்யக்கோரியும், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரியும் முழக்கம் எழுப்பினர்.
சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், பாஜக, மஜதவினரை சந்தித்து தர்ணாவை கைவிட கோரினார். இதை ஏற்க மறுத்த அவர்கள் அவையிலே தங்கி விடியவிடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.