குடியரசுத் தலைவர் மாளிகையின் ‘தர்பார் ஹால்’ இனி ‘கணதந்திர மண்டபம்’!

குடியரசுத் தலைவர் மாளிகையின் ‘தர்பார் ஹால்’ இனி ‘கணதந்திர மண்டபம்’!
Updated on
1 min read

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் ஹால் உள்பட இரண்டு அரங்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசுத் தலைவர் மாளிகை, குடியரசுத் தலைவரின் அலுவலகமாகவும், வசிப்பிடமாகவும், தேசத்தின் சின்னமாகவும், மக்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகவும் உள்ளது. அதை மக்கள் அணுகுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகை இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகையின் முக்கியமான இரண்டு அரங்குகளான ‘தர்பார் ஹால்’ மற்றும் ‘அசோக் ஹால்’ ஆகியவற்றை முறையே ‘கணதந்திர மண்டபம்’ மற்றும் ‘அசோக் மண்டபம்’ என மறுபெயரிடுவதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகிழ்ச்சியடைகிறார்.

'தர்பார் ஹால்' என்பது தேசிய விருதுகள் வழங்குவது போன்ற முக்கியமான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் இடமாகும். 'தர்பார்' என்ற சொல் இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் நீதிமன்றங்கள் மற்றும் கூட்டங்களைக் குறிக்கிறது. இந்தியா, குடியரசாக மாறிய பிறகு அது பொருத்தத்தை இழந்தது. 'கணதந்திரம்' என்ற கருத்து, பழங்காலத்திலிருந்தே இந்திய சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது 'கணதந்திர மண்டபம்' இடத்திற்கு பொருத்தமான பெயராக உள்ளது.

"அசோக் ஹால்" முதலில் ஒரு நடன அரங்காகும். ‘அசோக்’ என்ற சொல் ‘எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்ட’ அல்லது ‘எந்த துக்கமும் இல்லாத’ ஒருவரைக் குறிக்கிறது. மேலும், ‘அசோகா’ என்பது ஒற்றுமை மற்றும் அமைதியான சகவாழ்வின் சின்னமான அசோக் பேரரசரைக் குறிக்கிறது. இந்த வார்த்தை இந்திய மத மரபுகள் மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்ட அசோக மரத்தையும் குறிக்கிறது. ‘அசோக் ஹால்’ என்பதை ‘அசோக் மண்டபம்’ என மறுபெயரிடுவது மொழியில் சீரான தன்மையைக் கொண்டுவருகிறது. மேலும், ‘அசோக்’ என்ற வார்த்தையுடன் தொடர்புடைய முக்கிய மதிப்புகளை நிலைநிறுத்தும்போது ஆங்கிலமயமாக்கலின் தடயங்களை நீக்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in