Published : 03 May 2018 08:00 AM
Last Updated : 03 May 2018 08:00 AM

ம.பி. மகாகாளேஷ்வர் கோயில் வழிபாட்டு சடங்கில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

மகாகாளேஷ்வர் கோயில் வழிபாட்டு சடங்குகளில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் உள்ள சிவலிங்கம் அபிஷேகத்தாலும், மாசுபட்ட தண்ணீரால் கரைவதாகவும் லிங்கத்தை பாதுகாக்க கோயில் நிர்வாகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும் உஜ்ஜைனியைச் சேர்ந்த சரிகா குரு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொல்பொருள் மற்றும் மண்ணியல் துறைகளைச் சேர்ந்த நிபுணர் குழுவை அமைத்தது. கோயில் நிர்வாகத்தினருடன் ஆலோசனை செய்த நிபுணர் குழுவின் யோசனையின் பேரில் பக்தர்கள் சிவலிங்கத்துக்கு 500 மிலி. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் மட்டுமே அபிஷேகம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், நேற்று இந்த மனு மீதான விசாரணையின்போது ‘மகாகாளேஷ்வர் கோயில் வழிபாட்டு சடங்குகளில் நீதிமன்றம் தலையிடாது. மனுதாரர், நிபுணர் குழு தெரிவித்த யோசனை அடிப்படையில் கோயில் நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி அந்த யோசனைகளை அமல்படுத்தி வருகிறது’ என்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலிதா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

இதற்கிடையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி புதிய வழிபாட்டு முறைகள் அமலுக்கு வந்துள்ளதாக கோயிலில் பலகை கள் வைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்தது. இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, ‘‘கோயிலில் உள்ள லிங்கத்தை பாதுகாப்பது பற்றி மட்டும்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டு முறைகள் குறித்து கோயில் நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x