

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியை ராணுவ வீரர்கள் நேற்று வெற்றிகரமாக முறியடித்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் குந்தா பகுதியில் உள்ள ஒரு ராணுவ சாவடி மீது 2- 3தீவிரவாதிகள் நேற்று அதிகாலையில் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு அந்த ராணுவ சாவடியில் இருந்து வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றதால் மிகப் பெரிய தாக்குல் முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜம்முவில் கடந்த சனிக்கிழமை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி தலைமை யில் பாதுகாப்பு நிலவரம் குறித்து உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.