Published : 23 Jul 2024 05:18 AM
Last Updated : 23 Jul 2024 05:18 AM
புதுடெல்லி: பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரின் ஜாஞ்சர்பூரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ராம்பிரித் மண்டல், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்க பிஹார் மற்றும் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா என்று நிதி அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியதாவது:
பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. மலைப்பாங்கான, கடினமான நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை அடர்த்தி அல்லது பழங்குடியினரின் கணிசமான பங்கு, பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பில் பின்தங்கிய நிலை, மாநில நிதிகளின் சாத்தியமற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு தேசிய வளர்ச்சி கவுன்சிலால் (என்டிசி) சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கடந்த காலத்தில் வழங்கப்பட்டது.
முன்னதாக, சிறப்பு அந்தஸ்துக்கான பிஹாரின்கோரிக்கையை அமைச்சகங்களுக்கு இடையிலான குழு (ஐஎம்ஜி) பரிசீலித்து அது தொடர்பான அறிக்கையை 2012 மார்ச் 30-ம் தேதியன்று சமர்ப்பித்தது. என்டிசி அளவுகோல்களின் அடிப்படையில் பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க இயலாது என்பது ஐஎம்ஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.
சிறப்பு அந்தஸ்து என்பது பின்தங்கிய மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த மத்திய அரசின் கூடுதல் ஆதரவைஉறுதி செய்கிறது. அரசியலமைப்பு சட்டம் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்தை வழங்கவில்லை. என்றாலும் 1969-ம் ஆண்டு ஐந்தாவது நிதிக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுவரை ஜம்மு-காஷ்மீர்,இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவை சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளன. இந்த மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தின் கீழ் மத்திய அரசின் திட்டங்களில் அதிக நிதியுதவி, வரிகளில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஆர்ஜேடி விமர்சனம்: சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், பிஹாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள மாநில ஆளும்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை (ஜேடியு) கடுமையாக விமர்சித்துள்ளது. “ நிதிஷ் குமார் மற்றும் ஜேடியு தலைவர்கள் மத்தியில் அதிகாரத்தின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு அந்தஸ்து மீதான அவர்களின் நாடக அரசியலை தொடர்ந்து நடத்துவர்’’ என்று எக்ஸ் தளத்தில் ஆர்ஜேடி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT