

மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய இலங்கை அதிகாரிகள் இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வெள்ளி க்கிழமை நடைபெற்றது.
இதில் இரு நாடுகளாலும் கைது செய்யப்படும் மீனவர்களை விரைவாக விடுதலை செய்யும் வகையில் கூட்டு விசாரணை கமிட்டி ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து இலங்கை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை தரப்பில் கூறும்போது, “தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே இரு நாடுகளின் கூட்டு விசாரணை அமைப்பு உள்ளது.
இதன் மூலம் எப்.ஐ.ஆர். உள்ளிட்ட சட்ட நடைமுறைகள் இல்லாமல் மீனவர்களை சிறையில் இருந்து விரைவில் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்படும்.
இந்த கூட்டு விசாரணை கமிட்டியை ஆந்திரம், ஒடிஸா உள்ளிட்ட இந்தியாவின் பிற கடலோர மாநிலங்களிலும் அமைக்க வேண்டும். இந்த மாநிலங்களில் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க தற்போது மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது” என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு இந்தியா தரப்பில், “இதுபோன்ற கூட்டு விசாரணை கமிட்டி அமைக்க தமிழகம் தவிர பிற கடலோர மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்படும்” என்று உறுதி அளிக்கப்பட்டது.
கூட்டு விசாரணை கமிட்டி தவிர மீன் வளத்துறையில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் அதிகாரிகள் குழு விவாதித்தது.