Published : 22 Jul 2024 06:30 AM
Last Updated : 22 Jul 2024 06:30 AM
புதுடெல்லி: தமிழரான வாராணசி ஆட்சியர் ராஜலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் குழுவுக்கு தேசிய அளவிலான மின் ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு முதல்மத்திய அரசு சார்பில் தேசிய மின் ஆளுமை விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024-ம் ஆண்டுக்கான விருது உத்தர பிரதேசத்தின் வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கத்துக்கு அளிக்கப்பட உள்ளது. இந்த மாவட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியில் அமைந்துள்ளது.
தேசிய மின் ஆளுமை விருதுக்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அமைச்சகங்கள், மத்திய இணை அமைச்சகங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்கள், மாவட்டங்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள், தனியார் கல்வி, ஆய்வு நிறுவனங்கள் விண்ணப்பிக்கின்றன. இந்த ஆண்டு வாராணசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம், தேசிய மின் ஆளுமை விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் ஆட்சியர் ராஜ லிங்கம் கூறும்போது, ‘வட்டார அளவு வரையிலான அரசு மருத்து வமனைகளில் ‘லேப் மித்ரா' (நட்பக மருத்துவப் பரிசோதனை) என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினோம். இதற்காக தேசிய மின் ஆளுமை விருது கிடைத்துள்ளது. இதில், பொதுமக்களின் மருத்துவப் பரிசோதனை முடிவுகளை இணையத்தில் பதிவேற்றி அவர்களின் கைப்பேசிகளுக்கு குறுந்தகவலாக அனுப்புகிறோம். இதன்மூலம், மீண்டும் மருத்துவமனைக்கு வராமல் சுமார் 2 லட்சம் பேர் பலன்அடைகிறார்கள். இந்த திட்டத்தைவிரைவில் பொது சுகாதார நிலையங்களுக்கும் அறிமுகப்படுத்த உள்ளோம்’ என்று தெரிவித்தார்.
மும்பையில் நடைபெறவிருக்கும் மின் ஆளுமை கருத்தரங்கில் வாராணசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் விருதினை பெறஉள்ளார். கடந்த 2008-ம் ஆண்டில்உத்தர பிரதேச ஐபிஎஸ் அதிகாரியாக பதவியேற்ற எஸ்.ராஜலிங்கம் கடந்த 2009-ம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று அதே மாநிலப் பிரிவை பெற்றார். தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூரை சேர்ந்த அவர், திருச்சியின் என்ஐடி பட்டதாரி ஆவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT