Published : 21 Jul 2024 06:32 AM
Last Updated : 21 Jul 2024 06:32 AM

ரூ.70 ஆயிரம் கோடியில் நவீன போர்க்கப்பல்கள் தயாரிப்பு: பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல்

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பில் அதி நவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்துக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) மற்றும் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) ஆகியவை கடற்படைக்கு தேவையான பல ரக போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கின்றன.

இந்நிலையில் எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் செல்லும் அதிநவீன போர்க்கப்பல்களை இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனங்களில் தயாரிப்பதற்கு ரூ.70,000 கோடி மதிப்பில் ஆர்டர் கொடுக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தயாராக உள்ளது. இந்த கப்பல்களில் அனைத்து அம்சங்களும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இருக்கும்.

கப்பல்களில் பொருத்தப்படும் பீரங்கிகள், பிரம்மோஸ் ஏவுகணை கள், நீழ்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் எலக்ட்ரானிக் போர்க் கருவிகள் அனைத்தும் உள்நாட்டு நிறுவனங் களின் தயாரிப்புகளாக இருக்கும்.

17பி திட்டம்: இந்த அதி நவீன கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்துக்கு 17பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் எம்எடிஎல் மற்றும் ஜிஆர்எஸ்இ ஆகிய இரண்டு கப்பல் கட்டும் நிறுவனங்களும் இணைந்து அதிநவீன போர்க்கப்பல் கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும்.

மேலும் எம்டிஎல் நிறுவனம் இந்த நிதியாண்டுக்குள் 3 கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களை ரூ.35,000 கோடி மதிப்பில் தயாரிக்கும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நீர்மூழ்கி கப்பல்கள், இங்கு ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 6 கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களை விட பெரியதாக இருக்கும்.

கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ நிறுவனம் தற்போது அடுத்த தலைமுறை ரோந்து கப்பல்களையும், நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாட்டு ஆர்டர்களையும் பெற்றுள்ளது. இன்னும் பல ஆர்டர்களையும் பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x