Published : 23 May 2018 11:47 AM
Last Updated : 23 May 2018 11:47 AM

வருவாயைக் காட்டிலும் அதிக செலவு; அதிமுக, திமுக முன்னிலை: தேர்தல் ஆணையம் அறிக்கையில் தகவல்

கடந்த 2016-17-ம் தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக கட்சிகள் தங்களின் வருவாயைக் காட்டிலும் அதிகமாகச் செலவு செய்துள்ளது தேர்தல் ஆணையத்தில் அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் நாட்டில் உள்ள 32 பிராந்தியக் கட்சிகள் தங்களின் வருமானம் குறித்த வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தன. அது குறித்து ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த 2015-16, 2016-17ம் ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி, ஆந்திராவில் உள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக கட்சிகள் அதிக வருவாயைப் பெற்ற கட்சிகளாக உள்ளன.

அதேசமயம், அதிகமாகச் செலவு செய்த கணக்கிலும் சமாஜ்வாதிக் கட்சிக்கு அடுத்ததாக அதிமுக, திமுக கட்சிகளே உள்ளன.

இதில் திமுகவுக்கு கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.77.63 கோடி வருவாய் வந்த நிலையில், 2016-17ம் ஆண்டில் ரூ3.78 கோடியாக வருவாய் குறைந்துள்ளது. ஆனால், 2016-17-ம் ஆண்டில் திமுக தனது வருவாயில் இருந்து ரூ.85.66 கோடி செலவு செய்துள்ளதாக வரவு செலவு கணக்கில் தெரிவித்துள்ளது.

அதிமுக கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.54.83 கோடியும், 2016-17-ம் ஆண்டில் ரூ.48.88 கோடியும், 2016-17-ம் ஆண்டில் ரூ.86.77 கோடியும் செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பாமக கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.6.076 கோடியும், 2016-17-ம் ஆண்டில் 3.58 கோடியும், ரூ.2016-17-ம் ஆண்டில் ரூ.4.20 கோடியும் செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தேமுதிக கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.3.12 கோடியும், 2016-17-ம் ஆண்டில் 0.83 கோடியும், ரூ.2016-17-ம் ஆண்டில் ரூ.4.84 கோடியும் செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது

சமாஜ்வாதிக் கட்சிக்குக் கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் முறையே ரூ.79, ரூ.82 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2016-17-ம் ஆண்டில் ரூ.147 கோடி செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதில் அதிமுக கட்சி தங்களின் வருமானத்துக்கான வழி பெரும்பகுதி வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் மூலமாகவும், தொண்டர்களின் நன்கொடை, உள்ளாட்சித் தேர்தலில் மனுச்செய்தவர்கள் செலுத்திய தொகை ஆகியவை மூலம் வந்தது எனத் தெரிவித்துள்ளது. அதேசமயம், திமுக கட்சி வருமானத்துக்கான வழிகளைத் தெரிவிக்கவில்லை.

சமாஜ்வாதிக் கட்சி தனது வருவாயில் 50 சதவீதம் நன்கொடைகள் மூலமாகவும், சிவசேனா கட்சி தனது வருவாயில் 82 சதவீதம் நன்கொடை மூலமாகவும் வருவதாதகத் தெரிவித்துள்ளன.

ஒட்டுமொத்த 32 மாநிலக் கட்சிகளின் வருவாய் 2016-17ம் ஆண்டில் ரூ.321.03 கோடியாகும், இதில் ஒட்டுமொத்த செலவு ரூ.435.48 கோடியாகும். இதில் 16 பிராந்தியக்கட்சிகள் எந்தவிதமான கணக்கையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி, ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியகட்சிகள் வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்யவில்லை.

32 அரசியல் கட்சிகளில் 17 கட்சிகள் தங்களின் வருவாயில் ரூ.114.45 கோடியைச் செலவு செய்யாமல் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. 14 கட்சிகள் 2016-17-ம் ஆண்டில் வருவாய் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளன.

கடந்த 2015-16ம் ஆண்டில் 27 பிராந்தியக் கட்சிகளின் வருமானவரி ரிட்டன் ரூ.291.14 கோடியாக இருந்த நிலையில், இது 2016-17ம் ஆண்டில் ரூ.316.05 கோடியாக உயர்ந்துள்ளது.

2016-17-ம் ஆண்டில், அசாசுதீன் ஒவைசியின் ஏஐஎம்எம் கட்சி தனது வருவாயில் 87 சதவீதத்தைச் செலவு செய்யவில்லை என்றும், தெலுங்கு தேசம் கட்சி தனது வருவாயில் 67 சதவீதத்தைச் செலவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x