

சண்டிகர்: ராணுவத்தில் அக்னிபாதை திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்படும் இளம் வீரர்கள் 4 ஆண்டு காலம் பணியில் இருப்பர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர். 4 ஆண்டு பணிக்குப்பின் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணியில் ஈடுபடுத்தப்படுவர். மற்றவர்கள் ரூ.10 லட்சம் நிதியுடன் அனுப்பப்படுவர். அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் இல்லை.
இந்நிலையில், ஹரியாணாவில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு காவல் துறை மற்றும் சுரங்க காவலர் பணியிடங்களில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அக்னி வீரர்கள் குறித்து காங்கிரஸ் கட்சி தவறான பிரச்சாரம் செய்கிறது. இது பிரதமர் மோடியின் மிக அருமையான திட்டம். அக்னி வீரர்களுக்கு போலீஸ் மற்றும் சுரங்க காவலர் பணியிடங்களில் 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளிலும் அக்னி வீரர்களுக்கு 3 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். முதல் அணி அக்னிவீரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும். அக்னி வீரர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 ஹரியாணா அரசு மானியமாக வழங்கும். இவ்வாறு நாயப் சிங் சைனி தெரிவித்தார்.