Published : 18 Jul 2024 06:54 AM
Last Updated : 18 Jul 2024 06:54 AM
பிரயாக்ராஜ்: கேங்ஸ்டர் ஆதிக் அகமதின் ரூ.50 கோடி சொத்துகள் உத்தர பிரதேச அரசுக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மீது 100-க்கும் மேற்பட குற்ற வழக்குகள் இருந்த நிலையில், உத்தர பிரதேச காவல் துறை இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவ பரிசோதனைக்காக இவர்களை காவல் துறை அழைத்துச் சென்றபோது, கூலிப்படையினர் இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். சம்பவ இடத்திலேயே ஆதிக் அகமதும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதும் உயிரிழந்தனர்.
இதனிடையே, ஆதிக் அகமது மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான பல்வேறு சொத்துகளை உத்திர பிரதேச காவல் துறை முடக்கியது. இதில், ஆதிக் அகமது தொடர்புடைய ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் தற்போது உத்தர பிரதேச அரசுக்கு சொந்தமானதாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “ஆதிக் அகமது குற்றச்செயல்கள் மூலம் பெற்ற பணத்தில் 2.37 ஹெக்டேர் நிலத்தை ஹூபலால் பெயரில் வாங்கினார். தேவைப்படும் சமயத்தில் இந்த நிலத்தை தன்னுடைய பெயரில் பதிவு செய்வேன் என்று ஹூபலாலிடம் ஆதிக் கூறினார். இந்தச் சொத்து உத்தர பிரதேச காவல் துறையால் கடந்த ஆண்டு முடக்கப்பட்டது.
ஆதிக் அகமது தரப்பிலிருந்து பதிலளிக்க 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. அவர்களது தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதையடுத்து இது தொடர்பான ஆவணங்களை காவல் துறை ஆணையர் பிரயாக்ராஜ் நீதிமன்றத்துக்கு அனுப்பினார். அதை விசாரித்த நீதிபதி வினோத் குமார், காவல் துறை ஆணையரின் நடவடிக்கை சரியானது கூறி இந்த சொத்துகளை அரசு சொத்தாக மாற்ற உத்தரவிட்டார்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT