Published : 22 May 2018 01:26 PM
Last Updated : 22 May 2018 01:26 PM

ஜனநாயகத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் அச்சுறுத்தல்; 2019-தேர்தலுக்காகப் பிரார்த்திப்போம்: ஆர்ச் பிஷப் கடிதத்தால் சர்ச்சை

நாட்டில் ஜனநாயகத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொந்தளிப்பான அரசியல் சூழல் நிலவுகிறது, ஆதலால், 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று டெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனைத்துத் தேவாலயங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதம் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிராக எழுதப்பட்டதாக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், ஆர்ச்பிஷப் அணில் குட்டோ நாட்டின் நலனுக்காக எப்போதும் போல் பிரார்த்தனை செய்யக்கோரி எழுதப்பட்ட கடிதம்தான். வேறு எந்த உள்நோக்கத்துடனும் எழுதப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனில் குட்டோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

நம்முடைய நாட்டில் மிகவும் கொந்தளிப்பான அரசியல் சூழலை சந்தித்து வருகிறோம். இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக கொள்கைகளுக்கும், மதச்சார்பின்மைக்கும் பெரும் அச்சுறுத்தலை விடுக்கிறது.

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை நாம் சந்திக்க இருக்கும் நிலையில் நாம் நாட்டின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அனைவரும் வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒருவர் ஒருவேளை மட்டும் உணவு உண்டு, நாட்டின் நலனுக்காக விரதம் இருக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் மரியாதையுடன் கூடிய உண்மையான ஜனநாயகம் எழவும், நம் அரசியல்கட்சி தலைவர்களிடையே நேர்மையான தேசப்பற்று உருவாகவும் பிரார்த்திக்க வேண்டும்.

இதுபோன் கடினமான நேரத்தில் உண்மை, நீதி, சுதந்திரத்தைக் கருமேகங்கள் மறைத்துவிடுகின்றன. இதற்காக நம்முடைய கடவுளிடம் அதை நம் கண்களில் ஒளிரச்செய்யப் பிரார்த்திக்க வேண்டும். அனைத்து தேவாலயங்களும், பிரார்த்தனை கூடங்களும் நாட்டின் நலனுக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். இம்மாதம் 13-ம் தேதியில் இருந்து பிரார்த்தனையை தொடங்கலாம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம், ஆர்ச் பிஷப் அனில் குட்டோவால் கடந்த 8-ம் தேதி அனைத்துத் தேவாலயங்களுக்கும் பிரார்த்தனை செய்யக்கோரி எழுதப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

mukhtar-abbas-naqvijpgமத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி100 

இந்தக் கடிதம் குறித்து மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘‘பிரதமர் மோடி, அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காகவே பணியாற்றி வருகிறார். எந்த மதத்தினரையும், வகுப்பினரையும் அவர் பிரித்துப்பார்க்கவில்லை, வேறுபாடு காட்டவில்லை. நாம் முற்போக்கு சிந்தனையுடனும், வளர்ச்சி நோக்கத்தில் மட்டுமே சிந்திக்கவேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, டெல்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ, தான் எழுதிய கடிதம் எந்தவிதமான உள்நோக்கத்திலும் எழுதப்படவில்லை என தெரவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

‘‘நான் எந்த உள்நோக்கத்திலும் இந்த கடித்ததை எழுதவில்லை. நாட்டின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்கக்கோருவது இயல்பான ஒன்று. நாட்டின் நலனுக்காகக் கிறிஸ்தவ தேவாலயங்கள் வாரத்துக்கு ஒருநாள் பிரார்த்தனை செய்வது என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம், இதில் யாரும் தலையிட முடியாது.

நாட்டில் நிலவும் சில சூழல்கள் சில நேரங்களில் கவலையளிக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நாட்டுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் மட்டுமே. இந்தக் கடிதம் பிரதமருக்கு எதிராகவோ அல்லது வேறு தனிப்பட்ட மனிதருக்கு எதிராகவோ அல்ல.

கடந்த 4 ஆண்டுகளாக ஊடகங்களிலும், நாளேடுகளிலும் சிறுபான்மையினர், மக்கள் எந்த அளவுக்கு துன்பங்களைச் சந்தித்தார்கள், எதைச் சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது எனக் கட்டளையிடப்பட்டார்கள், தலித்மக்கள் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள் என்பதைப் பார்த்தோம். உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகளே நாட்டின் சூழல் குறித்து வெளிப்படையாகப் பேசினார்கள்.

அதன் அடிப்படையில்தான் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் இதுபோன்ற பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கான ஒன்றாகும்’’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x