Published : 17 Jul 2024 06:22 AM
Last Updated : 17 Jul 2024 06:22 AM

உத்தராகண்டில் புனித ஏரி அருகே கோயில் கட்டிய சாமியார்: பொதுமக்கள் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

உத்தராகண்டில் புனித ஏரி அருகே அமைக்கப்பட்டுள்ள கோயில்.

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள பனிமலை அருகே தேவி குந்த் என்ற புனித ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகே சுதேர்துங்கா ஆறு பாய்கிறது. பனிமலையிலிருந்து வரும் நீரால் உருவான ஏரி என்பதால் தேவிகுந்த் ஏரியை இப்பகுதி மக்கள் புனித ஏரியாக போற்றி வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஏரிக்கு அருகே பாபா சைதன்யா ஆகாஷ் என்ற சாமியார், சட்டவிரோதமாக சிறிய அளவிலான கோயில் கட்டியுள்ளார். இதில் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக அவர் தங்கியுள்ளார். அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்தபோது தனக்கு கனவில் கடவுள் வந்து ஆசி அருளியதாகவும், அந்தப் பகுதியில் கோயில் கட்டுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு பாகேஷ்வர் மாவட்ட ஆட்சியர் அனுராதா பால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. அக்சய் பிரகலாத் கோண்டே கூறும்போது, “இந்த சிறிய கோயிலானது கற்கள் மற்றும் மரக்கட்டைகளை வைத்துகட்டப்பட்டுள்ளது. மலை உச்சியில்கோயில் இருப்பதால், கோயிலுக்குசெல்லும் பாதை மிகவும் கரடுமுரடாக உள்ளது. அப்பகுதியில் கோயிலோ அல்லது வேறு கட்டிடங்களோ கட்டுவது சட்டவிரோதமானது.

கடந்த 12 நாட்களுக்கும் மேலாக அந்த சாமியார் அங்கேயே தங்கியிருக்கிறார். மேலும் புனிதமான தேவி குந்த் ஏரியில் குளித்துகோயிலில் பூஜை செய்கிறார்.

இதற்கு அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் புனித ஏரியை அவர் பாழ்படுத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளனர். கோயிலை அகற்றுவதற்கும், சாமியாரை இங்கிருந்து வெளியேற்றுவதற்கும் வனத்துறை அதிகாரிகளின் உதவி தேவைப்படுகிறது. இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x