Published : 20 Aug 2014 02:53 PM
Last Updated : 20 Aug 2014 02:53 PM

திட்டங்களை துரிதமாக செயல்படுத்துக: பாதுகாப்புத் துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

"உலகின் வேகத்திற்கு ஏற்ப நாம் ஓட வேண்டும். இல்லை என்றால், நம்மை மற்றவர்கள் முந்திச் சென்றுவிடுவார்கள்" என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் குழுமத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டி.ஆர்.டி.ஓ ஆராய்ச்சிகளை துரிதப்படுத்தவும், திட்டங்களை வேகமாக செயல்படுத்தவும் வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

"உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் காலதாமதாக செயல்பட்டால், நமக்காக உலகம் காத்துக்கொண்டிருக்காது.

பல்வேறு திட்டங்கள் ஆய்வு நிலையிலேயே தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை விரைந்து முடிக்க வேண்டும். இளைஞர்களுக்கு ஆராய்ச்சிகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முப்படை வீரர்களீன் வாழ்வை எளிமைப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

1992-ல் ஒரு திட்டத்தை துவக்கிவிட்டு 2014-ல் திட்டத்தை செயல்படுத்த இன்னும் சில நாட்களாகும் என சொல்லக்கூடாது.

உலகின் வேகத்திற்கு ஏற்ப நாம் ஓட வேண்டும். இல்லை என்றால் மற்றவர்கள் நம்மை முந்திச் சென்றுவிடுவார்கள். ஒரு வேலையை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே முடிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வதே இந்தியாவின் மிகப்பெரிய சவால்.

ஒரு பொருள் 2020-ல் சந்தைக்கு வருகிறது என்றால், நாம் அதே பொருளை 2018-ல் சந்தைப்படுத்த வேண்டும். இந்தியர்களுக்கு இதற்கான திறன் இல்லை என்று அர்த்தமில்லை. ஆனால் நம்மிடம் ஒரு மோசமான பழக்கம் இருக்கிறது. 'ஆமாம், அது நடக்கும்' என்ற ஒரு மெத்தனப்போக்கே ஆகும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் குழுமத்தின் லகு ரகு விமானம் தேஜஸ், நாக் ஏவுகணை, அதிகதூரம் செல்லக்கூடிய ஏவுகணை, முன்னெச்சரிக்கை உபகரணங்கள் ஆகியன பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் குழுமத்தின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. உங்களால் முடியும், திட்டங்களை விரைந்து செயல்படுத்துங்கள்" என்றார்.

தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம்:

மேலும், "போர் முகங்கள் மாறிவருகின்றன. பாதுகாப்புப் படையை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது. தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாதுகாப்பு ஆயுதங்களை தயாரிக்கும்போது, போர்வீரர்களின் கருத்தையும் கேட்க வேண்டும். ஏனெனில் அவர்களே போர்முனையில் ஆயுதங்களை பயன்படுத்தப்போகின்றனர். அவர்களால் நல்ல யோசனைகளை வழங்க முடியும்.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து மாணவர்களிடன் கருத்துகள் கேட்கலாம். அவர்கள் புதிய, அதிநவீன யோசனைகளை வழங்குவார்கள். பாதுகாப்பு தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்தி ஆண்டுதோறும் ரோபோடிக்ஸ் துறை சார்ந்த போட்டிகளை நடத்த வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x