Published : 16 Jul 2024 06:51 AM
Last Updated : 16 Jul 2024 06:51 AM

மருத்துவமனை லிப்டில் சிக்கியவர் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு: கேரளாவில் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

திருவனந்தபுரம்: கேரள மருத்துவமனை லிப்டில் 2 நாட்களாக சிக்கி இருந்தவர் நேற்று மீட்கப்பட்டார். இது தொடர்பாக 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து கேரள போலீஸார் நேற்று கூறியதாவது:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நாயர் (59), கடந்த சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாததால், ரவீந்திரன் நாயரை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் அளித்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல லிப்ட் செயல்பட தொடங்கியது. அப்போது ரவீந்திரன்லிப்ட்டுக்குள்ளேயே 2 நாட்களாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டார்.

பின்னர் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது,புறநோயாளிகள் பிரிவில் உள்ள லிப்டில் முதல் தளத்துக்கு செல்ல முயன்றபோது லிப்ட் கீழே இறங்கியதுடன் திறக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டபோதும் யாரும் உதவிக்கு வரவில்லை என அவர் தெரிவித்தார். இதனிடையே அவருடைய செல்போனும் செயல்படாததால் குடும்பத்தினரால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இவ்வாறு கேரள போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரவீந்திரன் நாயர் கூறும்போது, “லிப்ட்டுக்குள் இருந்தஅவசர உதவி எண்களை அழைத்தேன்.ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. அதிலிருந்த எச்சரிக்கை ஒலி பொத்தானையும் அழுத்தினேன். அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதன் பிறகு, இரண்டாவது சனிக்கிழமை அடுத்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருக்கும் எனக் கருதி உதவிக்காக காத்திருந்தேன்” என்றார்.

இதனிடையே, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவமனையின் 2 லிப்ட் ஆபரேட்டர்கள் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில சுகாதாரத் துறை நேற்று உத்தரவிட்டது. மேலும் இந்தசம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மாநில சுகாதாரத் துறைஅமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x