Published : 16 Jul 2024 07:03 AM
Last Updated : 16 Jul 2024 07:03 AM
புதுடெல்லி: சீனா மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணராக கருதப்படும் விக்ரம் மிஸ்ரி (59), நாட்டின் புதிய வெளியுறவு செயலாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
வெளியுறவுத் துறையின் செயலாளராக இருந்த வினய் குவாத்ரா கடந்த மார்ச் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில் அவருக்கு ஜூலை 14 வரை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் வினய் குவாத்ரா நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய வெளியுறவு செயலாளராக விக்ரம் மிஸ்ரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1989பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியானவிக்ரம் மிஸ்ரி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
அதற்கு முன் 2019 முதல் 2021வரை 3 ஆண்டுகள் சீனாவில் இந்தியத் தூதராக பணியாற்றினார். 2020 ஜூனில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து இந்திய – சீன பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்காற்றினார்.
விக்ரம் மிஸ்ரி, ஸ்பெயின் மற்றும் மியான்மரில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார். மேலும் பெல்ஜியம், பாகிஸ்தான், அமெரிக்கா, இலங்கை மற்றும் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகங்களில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
1997-ல் ஐ.கே.குஜ்ரால், 2012-ல் மன்மோகன் சிங், 2014-ல் நரேந்திர மோடி என 3 பிரதமர்களுக்கு தனிச் செயலாளராக பணியாறியுள்ளார். விக்ரம் மிஸ்ரிக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சர் வாழ்த்து: இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “வெளியுறவு செயலாளராக புதிய பொறுப்பை ஏற்றிருக்கும் விக்ரம் மிஸ்ரிக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் ஆக்கப்பூர்வமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில், “வெளியுறவு செயலாளராக விக்ரம் மிஸ்ரி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வெளியுறவு அமைச்சகம் அன்பான வரவேற்பு அளிக்கிறது. அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT