Last Updated : 29 May, 2018 02:59 PM

 

Published : 29 May 2018 02:59 PM
Last Updated : 29 May 2018 02:59 PM

கவலை வேண்டாம்… ரயில் டிக்கெட் முன்பதிவு ‘வெயிட்டிங் லிஸ்டா?’- ஐஆர்சிடிசி புதிய வசதி அறிமுகம்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்காக ரயில்வேயின் ஐஆர்சிடிசி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வசதியின்படி, காத்திருப்போர் பட்டியலில் ஒருவர் இருந்தால்,அவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்படுமா அல்லது ஆர்ஏசி நிலைக்கு வருமா என்பதை ரயில்வே அறிமுகம் செய்துள்ள கணித்துச் செல்லும்சேவை, அவர்களுக்குத் தகவல் அளிக்கும்.

இதன்மூலம் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதியாகுமா என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும்.இதன் மூலம் பயணிகளின் கடைசி நேர பரபரப்பு தவிர்க்கப்படும்.

ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கணித்துக்கூறும் சேவையை, மத்திய ரயில்வே தகவல் முறை உருவாக்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், எப்போது இருக்கை, அல்லது படுக்கை வசதி உறுதியாகும் என எதிர்பார்த்திருக்க இனி தேவையில்லை. ரயில்வே துறை டிக்கெட் முன்பதிவு குறித்த கணித்துச் சொல்லும் சேவையை அறிமுகப்படுத்துகிறது.

இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் காத்திருப்போர் பட்டியலி்ல இருந்தால், அவருக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதி செய்யப்படுமா அல்லது ஆர்ஏசியில் வருமா என்பதை அந்த கணித்துக்கூறும் சேவை கூறிவிடும். இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் நிலவரத்தை தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்'' எனத் தெரிவித்தார்.

இந்த கணித்துக்கூறும் சேவையை அறிமுகம் செய்ய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்தான் காரணமாக இருந்தவர். கடந்த 13 ஆண்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கணித்துக்கூறும் சேவையை உருவாக்கக் கோரி ரயில்வே தகவல் மையத்துக்கு அறிவுறுத்தி, அதை ஒரு ஆண்டுக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக நாள்தோறும் 13 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x