

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஊழல்வாதி என்று குற்றம்சாட்டியுள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், அவருக்கு எதிராக தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக அறிவித்தார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் 'ஊழல்வாதிகள்' பட்டியலில் சேர்த்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், மோடியும் ராகுலும் தங்களை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்துவதற்காக ரூ.500 கோடி அளவில் செலவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
அரவிந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியில் 'ஊழல் அரசியல்வாதிகள்' பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுகவைச் சேர்ந்த மு.க.அழகிரி, கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கேஜ்ரிவால் வெளியிட்ட சுமார் 160 பேர் கொண்ட ஊழல்வாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: நரேந்திர மோடி, ராகுல் காந்தி, சுரேஷ் கல்மாடி, நிதின் கட்காரி, ஜி.கே.வாசன், சுஷில் குமார் ஷிண்டே, பிரஃபுல் படேல், எடியூரப்பா, ஆனந்த் குமார், வீரப்ப மொய்லி, குமாரசாமி, ப.சிதம்பரம், அழகிரி, கனிமொழி, சல்மான் குர்ஷித், அன்னு தாண்டன், ஆ.ராசா, தருண் கோகாய், கபில் சிபல், மாயாவதி, முலாயம் சிங், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், பவன் பன்சால், ஃபரூக் அப்துல்லா மற்றும் நவீன் ஜிண்டால்.
நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பங்கேற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் இந்தப் பட்டியலை வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், "நான் நாட்டில் உள்ள நேர்மையற்றவர்கள் (அரசியல்வாதிகள்) பட்டியலை தயாரித்துள்ளேன். இந்தப் பட்டியலில் நேர்மையான அரசியல்வாதிகள் எவரேனும் இருந்தால், தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள்.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களை தோற்கடிக்கச் செய்வதா அல்லது நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதா என்பதை நாட்டு மக்களிடமே கேட்கிறேன்.
நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம் ஆத்மி தொண்டர்கள்) தயாரிக்கலாம். அதனை கட்சியிடம் அளியுங்கள்
எங்களுடைய நோக்கம் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்ல; பாஜக, காங்கிரஸ் போன்றவர்களுக்கு எதிராக அரசியல் செய்வதும் அல்ல. ஊழல்வாதிகளை நாடாளுமன்றத்துக்குள் அனுப்பக் கூடாது என்பதே எங்களது நோக்கம்" என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.
குறிப்பாக, தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக ரூ.500 கோடி செலவு செய்யும் இவர்கள் (மோடி, ராகுல்) நேர்மையான அரசைத் தரக்கூடியவர்களா? இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நம்மிடம் இருந்து பணத்தை மீட்டுக்கொள்வார்கள்" என்றார் அவர்.