கட்சித் தலைவரை செருப்பால் அடித்த மகளிரணி தலைவி

கட்சித் தலைவரை செருப்பால் அடித்த மகளிரணி தலைவி
Updated on
1 min read

தெலங்கானா மாநிலத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாவட்ட தலைவரை மகளிரணி தலைவி செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலங்கானாவின் கரீம்நரில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கட்சியின் உள்ளூர் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அங்கு கூடியிருந்தனர்.

அப்போது யார் கொடியை ஏற்றுவது என்பது தொடர்பாக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. அப்போது மகளிரணி தலைவி சுசிலா மாவட்ட தலைவர் சிங்கா ரெட்டியை திட்டியபடியே தாக்கத் தொடங்கினார். இதனை அவர் தடுத்தார்.

அப்போது திடீரென தனது செருப்பை கையில் எடுத்த சுசிலா, சிங்கா ரெட்டியை ஓட ஓட விரட்டி சரமாரியாக செருப்பால் அடித்தார். வேறு சிலரும் சேர்ந்து சிங்கா ரெட்டியை தாக்கினர். இதில் அவரது சட்டை கிழிந்தது. அடியை தாக்குப்பிடிக்க முடியாத சிங்கா ரெட்டி அங்கிருந்து விலகி ஓடினார்.

கட்சியின் மூத்த உறுப்பினர்களான தன்னையும், தனது கணவரையும் இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகவே அழைக்க வில்லை என்று சுசிலா குற்றம்சாட்டினார். மேலும் சிங்கா ரெட்டி போன்ற கட்சித் தலைவர்கள் பெண்களிடம் தரக்குறை வாக நடந்துகொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.

சுதந்திர தின விழாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in