இந்திய ஊடகங்கள் உலகளவில் செல்வாக்கை உயர்த்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி விருப்பம்

ஐஎன்எஸ் கட்டிட திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி
ஐஎன்எஸ் கட்டிட திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி
Updated on
1 min read

மும்பை: இந்திய ஊடகங்கள் உலகளவில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகத்தில் நடைபெற்ற ஐஎன்எஸ் (இந்திய செய்தித்தாள் சங்கம்) கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மொழிகளுக்கு தனதுசமூக ஊடகங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இந்திய ஊடகங்கள் உலகளவில் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைவதற்கான பயணத்தில் செய்தித்தாள்களின் பங்கு மிக முக்கியமானது. நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஊமையாக கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பது ஊடகங்களின் பணி கிடையாது. மாற்றத்தை கொண்டு வருவதும், வழிகாட்டுதலை வழங்குவதும் அவர்களின் தலையாய பொறுப்பாகும்.

மக்களின் உரிமைகள் மற்றும்அவர்களின் சொந்த திறன்களை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டும் மகத்தான பணியை ஊடகங்கள் செய்து வருகின்றன. டிஜிட்டல் இந்தியா போன்ற அரசின் திட்டங்களை ஊக்குவிப்பதில் ஊடகங்களின் பங்கு பாராட்டுதலுக்கு உரியது.

பாரத தேசத்தின் குடிமக்கள்இன்று தங்களின் திறமை மீதுநம்பிக்கை கொண்டு புதிய உச்சங்களை அடையத் தொடங்கியுள்ளனர். அரசியலமைப்பின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் குடிமக்கள் அனைவரும் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை அவர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்திய செய்தித்தாள் சங்கம் கடந்த 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சங்கம் மும்பையில் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் 1.25 லட்சம் சதுர அடியில் 14 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடத்தை புதிதாக கட்டியுள்ளது, இதில், ஏராளமான செய்தித்தாள் அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளன. ஐஎன்எஸ் சங்கத்தில் 800 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in