விருந்தில் அசைவம் இல்லாததால் திருமணத்தை நிறுத்தி பெண் வீட்டார் மீது தாக்குதல் @ உ.பி

விருந்தில் அசைவம் இல்லாததால் திருமணத்தை நிறுத்தி பெண் வீட்டார் மீது தாக்குதல் @ உ.பி
Updated on
1 min read

தியோரியா: விருந்தில் அசைவம் இடம்பெறாததால், பெண் வீட்டார் மீது தாக்குதல் நடத்தி திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார் மீது உ.பி.போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உ.பியைச் சேர்ந்தவர் அபிஷேக் சர்மா. இவருக்கும் தினேஷ் சர்மா என்பவரின் மகள் சுஷ்மாவுக்கும் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகர் கிராமத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்ற பின்பு திருமண விருந்தில் மட்டன், சிக்கன், மீன் போன்ற அசைவ உணவும் எதுவும் இல்லை, பன்னீர் மற்றும் புலாவ் உட்பட சைவ உணவு வகைகளே உள்ளன என்ற தகவலை மாப்பிள்ளை வீட்டார் அறிந்தனர்.

இது குறித்து பெண் வீட்டாரிடம் தகராறு செய்துள்ளனர். இதற்கு மணப் பெண்ணின் தந்தை தினேஷ் சர்மா எதிர்ப்பு தெரிவித்தார். உடனே மாப்பிள்ளை அபிஷேக் சர்மா, அவரது தந்தை சுரேந்திர சர்மா உட்பட மாப்பிள்ளை வீட்டு உறவினர்கள், பெண் வீட்டார் மீது தாக்குதல் நடத்தினர். சிலர் பெண் வீட்டார் மீது தடிகளால் தாக்குதல் நடத்தினர். திருமணத்தை ரத்து செய்வதாக கூறிவிட்டு மாப்பிள்ளை அபிஷேக் சர்மா திருமண மண்டபத்தை விட்டு சென்றுவிட்டார்.

இதுகுறித்து போலீஸில் தினேஷ் சர்மா புகார் தெரிவித்தார். திருமணத்துக்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் ரூ.4.5 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக வழங்கப்பட்டது என்றும், மாப்பிள்ளைக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இரண்டு தங்க மோதிரங்களும் வழங்கப்பட்டது என்றும் புகார் மனுவில் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in