வேலைவாய்ப்பு பெற உ.பி. மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்றுத்தர முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழிகள் இலவசமாக கற்றுத்தரப்பட உள்ளது. வேலைவாய்ப்புகள் பெறுவதற்காக இதற்கான உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.
பாஜக ஆளும் உ.பியில் இளைஞர்களின் திறமைகளை வளர்த்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இதற்காக உ.பி. திறன் வளர்ச்சி மிஷன் (யுபிஎஸ்டிஎம்) என்ற பெயரிலான திட்டம் முதல்வர் யோகியால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது வெளிநாட்டு மொழிகள் கற்றுத்தரப்பட உள்ளது. இதில் பிரெஞ்சு,ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் உ.பி. இளைஞர்களுக்கு இலவசமாக கற்பிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக லக்னோ,கான்பூர், கோரக்பூர், வாராணசி, ஆசம்கர், அயோத்யா, பிரயாக்ராஜ், ஜான்சி, பாந்தா ஆகிய 9 மாவட்டங்களில் இத்திட்டம் அமலாக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியை லக்னோவில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அளிக்க உள்ளனர். பயிற்சிக்கான கட்டணங்கள் மற்றும் செலவினங்களை உ.பி. அரசின் திறன் வளர்ச்சிமிஷன் நிறுவனம் ஏற்க உள்ளது. வாரத்தின் இறுதிநாட்களில் மொத்தம் 192 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிக்க உகந்த இடங்களை தேர்வு செய்யுமாறு 9 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் உ.பி. அரசுஉத்தரவிட்டுள்ளது. பிறகு இத்திட்டம் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
