

உத்திரப் பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிதாகத் திருமணமான ஆறு பெண்கள் முறையான கழிப்பறை வசதி இல்லாததால் தங்களின் புகுந்த வீட்டை விடுத்து, தாய் வீட்டிற்கே திரும்பி விட்டதாக அப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர் ஆஷா பர்வீன் தெரிவித்துள்ளார்.
நீலம், கலாவதி, ஷகினா, நீரன்ஜன், குடியா, சீதா ஆகியோரின் புகுந்த வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. அதனால், அவர்கள் ஆறு பேரும் அவரவர் தாய் வீட்டிற்கு திரும்பிவிட்டார்கள். மேலும், கணவர் வீட்டில் கழிப்பறை வசதி செய்து தரும் வரை அங்கு திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.” என ஆஷா பர்வீன் தெரிவித்தார்.
ஆயினும், இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாகத் துப்புரவு பிரச்சினைகளுக்காக உதவும் அரசு சாரா அமைப்பான சுலப் இன்டர்நேஷனலின் தலைவர் பிந்தேஷ்வர் பதக் கூறுகையில், “அந்த ஆறு பெண்களின் கணவர்கள் வீட்டில் கழிப்பறை வசதி செய்துதரப்படும்”, என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், அப்பெண்கள் எடுத்த முடிவு சரியானது என்றும், அசாதாரணமானது என்றும் தெரிவித்தார்.
“இதுபோன்ற சம்பவங்கள், கழிப்பறை வசதி குறித்து பெண்களின் விழிப்புணர்வை தெளிவாகக் காட்டுகிறது. இப்போது அனைவரும் கழிப்பறை வசதியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்றனர்.
இப்பிரச்சினை கிராமப்புறங்களில்தான் அதிகமாக உள்ளது. அங்குள்ள பெண்கள் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறார்கள். தங்களது அவசர தேவைகளுக்கு, சூரியன் உதிப்பதற்கு முன்போ, அல்லது மறைந்த பின்னோதான் வெளியில் செல்ல முடிகிறது”, என்று கூறுகிறார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த ஐ.நா ஆய்வின்படி, இந்தியாவில் கழிப்பறை பயன்படுத்துபவர்களை விடக் கைபேசியை பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர் என்று தெரிவித்தாக அவர் குறிப்பிடுக்கிறார்.
"பிரதமர் நரேந்திர மோடி எம்.பி.க்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம், இந்தியாவிலுள்ள பள்ளிகளில் பெண்களுக்கெனத் தனியாகக் கழிப்பிட வசதிகள் செய்து தர உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நாட்டு விரைவில் வெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாறும்" என்றும் பதக் நம்பிக்கை தெரிவித்தார்.