Last Updated : 08 May, 2018 09:38 PM

 

Published : 08 May 2018 09:38 PM
Last Updated : 08 May 2018 09:38 PM

ஜின்னாவுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்கக் கூடாது: உ.பி.யின் பரேலி மதரஸா மவுலானாவின் ஃபத்வா

எதிரிநாடான பாகிஸ்தான் நிறுவனர் முகம்மது அலி ஜின்னாவிற்கு இந்திய முஸ்லிம்கள் ஆதரவளிக்கக் கூடாது என உ.பி.யின் பரேலி மதரஸாவின் மவுலான ஃபத்வா அளித்துள்ளார்.

உ.பி.யின் முக்கிய மதரஸாக்களில் ஒன்றாக விளங்குவது அதன் மேற்குப் பகுதியில் உள்ள பரேலியின் ஆலா ஹசரத். இதன் மவுலானாக்களில் ஒருவரான ஷஹாபுத்தீனிடம் இன்று உ.பி.வாசியான ஒரு முஸ்லிம் ஜின்னாவைப் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு அளித்த பதிலில் ஜின்னாவிற்கு எதிரான ஃபத்வா அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபத்வாவை அளித்த மவுலானா ஷஹாபுத்தீன் கூறும்போது, ''முஸ்லிம்கள் ஜின்னாவிற்கு ஆதரவளிப்பது தவறு. ஜின்னா முஸ்லிம்களின் முன் உதாரணம் அல்ல என்பதால், அவரது உருவப்படத்தை வைப்பதும் தவறு ஆகும். இவர் நம் எதிரி நாட்டின் நிறுவனர் என்பதுடன் நம் நாட்டையும் பிரித்தவர். எனவே, ஜின்னாவிற்கு இந்திய முஸ்லிம்கள் ஆதரவளிக்கவோ, போற்றவோ கூடாது. ஜின்னாவிற்கு ஆதரவான விவாதங்களும் செய்வது தவறு என ஃபத்வா அளிக்கப்படுகிறது'' எனத் தெரிவித்தார்.

நாட்டின் பழமையான மத்தியப் பல்கலைகழகமான அலிகர் முஸ்லிம் பல்கலையின் மாணவர் பேரவைக் கட்டிடத்தில் முகம்மது அலி ஜின்னாவின் உருவப்படம் 1938 முதல் வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி உள்ளிட்ட பலரது உருவப்படங்களும் அக்கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பேரவை சார்பில் ஜின்னா உட்பட பேருக்கு கவுரவ உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டிருப்பது காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மீது அலிகர் நகர பாஜக மக்களவை எம்.பி.யான சதீஷ் கவுதம் கடந்த ஏப்ரல் 30-ல் கேள்வி எழுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து ஜின்னா மீது நாடு முழுவதிலும் கிளம்பிய விவாதம் முடிந்தபாடில்லை.

தொடரும் மாணவர் போராட்டம்

இதனிடையில் ஜின்னாவின் உருவப்படத்தை பல்கலை வளாகத்தில் நுழைந்து மே-2-ல் அகற்ற முயன்ற 6 இந்துத்துவா மாணவர்களில் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் அலிகர் பல்கலையின் மாணவர்கள் தம் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x