

மும்பை: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி, மும்பையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பொது நிகழ்ச்சி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவழியாக பல்வேறு கொண்டாட்டங்களுக்கும், சடங்குகளுக்கும் பின்னர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சண்ட் தம்பதிகளின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் (Jio World Convention Centre) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த திருமணத்தில் பல்வேறு மாநில முதல்வர்களும், உலக தலைவர்களும், பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இதனையொட்டி, மும்பை போக்குவரத்து காவல் துறை நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல் துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “ஜூலை 5 மற்றும் ஜூலை 12 முதல் 15-ம் தேதி வரை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தகவல்களையும் காவல் துறை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இதில் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தை ‘பொது நிகழ்ச்சி’ என காவல் துறை குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். “பொது நிகழ்ச்சி என்றால், சாதாரண மும்பைவாசி இந்நிகழ்வில் அனுமதிக்கப்படுவாரா?” என பெரும்பாலானோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“மும்பையைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவராக கேட்கிறேன். பொது நிகழ்வு என்றால், நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க பொதுமக்களுக்கு நுழைவுக் கட்டணம் உண்டா? அல்லது இலவசமா?” என மற்றொரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார். “ஒரு கோடீஸ்வரரின் மகன் திருமணம் நடைபெறுகிறது. மும்பை போக்குவரத்து காவல் துறை அதனை பொது நிகழ்வு என குறிப்பிடுகிறது. இதில் முரண் என்னவென்றால், இந்த பொது நிகழ்வில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவில் பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது உண்மைதான்” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், “இந்த ஆணவம் தான் மும்பையிலும், மகாராஷ்டிராவிலும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் சரிவுக்கு காரணமாக அமைந்தது. தனியார் நிகழ்ச்சி எது? பொது நிகழ்ச்சி எது என்பதில் மக்கள் தெளிவுடன் இருக்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.