Last Updated : 25 May, 2018 07:53 AM

 

Published : 25 May 2018 07:53 AM
Last Updated : 25 May 2018 07:53 AM

கோபப்பட்ட மம்தா பானர்ஜி; மன்னிப்பு கேட்ட முதல்வர் குமாரசாமி

கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்ற நிகழ்ச்சிக்கு வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். தன்னை அவமதித்து விட்டதாக கோபப்பட்ட மம்தா பானர்ஜியிடம் முதல்வர் குமாரசாமி மன்னிப்பு கேட்டார்.

கர்நாடக முதல்வராக குமாரசாமி நேற்று முன்தினம் பெங்களூருவில் பதவியேற்றார். இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த விழாவுக்காக கர்நாடகா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பெங்களூருவில் குவிந்தனர்.

இதனால் பெங்களூருவில் வழக்கத்தைவிட கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்க விதான சவுதா நோக்கி வந்த மம்தா பானர்ஜி டாக்டர் அம்பேத்கர் வீதி நுழைவாயிலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். சில நிமிடங்கள் காத்திருந்தும் வாகனங்கள் நகரவில்லை. இதனால் கோபமடைந்த அவர் சில மீட்டர் தூரம் நடந்தே விதான சவுதாவுக்கு வந்தார்.

போலீஸிடம் கோபம்

பதவியேற்பு மேடைக்கு வந்த மம்தா பானர்ஜி கர்நாடக போலீஸ் டிஜிபி நீலமணி ராஜூவை கோபமாக திட்டினார். பின்னர் அங்கு நின்றிருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரிடம் தன்னை அவமதித்துவிட்டதாக தெரிவித்தார். இதற்காக தேவகவுடா மம்தா பானர்ஜியிடம் கைகளைக் கூப்பி மன்னிப்பு கோரினார். முதல்வராக பதவியேற்ற பிறகு இதையறிந்த‌ குமாரசாமி, மம்தா பானர்ஜியிடம் மன்னிப்பு கோரினார்.பின்னர் டிஜிபி நீலமணி ராஜூ, பெங்களூரு காவல் ஆணையர் சுனில் குமார் உள்ளிட்டோரை அழைத்து அவர் முன்பாகவே கண்டித்துள்ளார். மம்தா பானர்ஜி கோபமாக நடந்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனிடையே, டி.ஜி.பி. நீலமணி ராஜூவை மம்தா அவமானப்படுத்திவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

“அரசியல் என்பது சேவை. அதன்மீது எப்படி ஆசைப்பட முடியும்?” - விஜய் ஆண்டனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x