Published : 26 May 2018 08:53 AM
Last Updated : 26 May 2018 08:53 AM

தரமான மருத்துவ வசதி வழங்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 145-வது இடம்: வங்கதேசம், பூடான் நாடுகளைக் காட்டிலும் பின்தங்கியது

உலக அளவில் தரமான மருத்துவ வசதிகளை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 145-வது இடம் கிடைத்துள்ளது. இதில், வங்கதேசம், இலங்கை, பூடான் ஆகிய அண்டை நாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 195 நாடுகளில் ‘லேன்சேட்’ என்ற மருத்துவ இதழ் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. எந்தெந்த நாடுகளில் தரமான மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன; அனைத்துத் தரப்பு மக்களாலும் அந்த மருத்துவ வசதிகளைப் பெற முடிகிறதா என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், தரமான மருத்துவ வசதிகளை வழங்கும் நாடுகளின் பட்டியலை லேன்சேட் இதழ் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தத் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவுக்கு 145-வது இடமே கிடைத்துள்ளது. அதேசமயத்தில், இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 48-வது இடத்திலும், இலங்கை 71-வது இடத்திலும் இருக்கின்றன. அதேபோல், வங்கதேசம் 133-வது இடத்தையும், பூடான் 134-வது இடத்தையும் பிடித்து இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளன.

காசநோய், இதய நோய், பக்கவாதம், பிறப்புறுப்பு புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், சிறுநீரக நோய்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கு தரமான மருத்துவ வசதியை வழங்குவதில் இந்தியாவில் சமநிலையற்ற தன்மை நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில், கோவாவும், கேரளாவும் தரமான மருத்துவ வசதிகளை வழங்கி வருவதாகவும், அசாமிலும், உத்தரபிரதேசத்திலும் தரமான மருத்துவ வசதிகள் இல்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தரவரிசைப் பட்டியலில் 97.1 புள்ளிகள் பெற்று ஐஸ்லாந்து நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடங்களை நார்வே (96.6), நெதர்லாந்து (96.1), ஆஸ்திரேலியா (95.9) ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x