பிஜு ஜனதா தள கட்சியின் மாநில நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: தேர்தல் தோல்வியை அடுத்து நவீன் பட்நாயக் நடவடிக்கை

நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசா மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் தோல்வியின் எதிரொலியாக பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பட்நாயக் நேற்று மேலும் கூறியதாவது: பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பர். மாநில அளவில் புதிய பொறுப்பாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர்.

மேலும், கட்சியின் புதிய தேசிய செய்தித் தொடர்பாளர்களாக சந்த்ருத் மிஸ்ரா, காளிகேஷ் நாராயண் சிங் தியோ, அமர் பட்நாயக், சஸ்மித் பத்ரா மற்றும் பிரதீப் குமார் மஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, மாநில செய்தித் தொடர்பாளராக கட்சியின் மூத்த தலைவர்கள் 14 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியின் மூத்த தலைவர் பிரதாப் ஜெனா மாநில ஊடக ஒருங்கிணைப்பாளராகவும், ஸ்வயம் பிரகாஷ் மொகபத்ரா சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர். லெலின் மொஹந்தி மற்றும் பிரியபிரதா மஜி ஊடகஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பிஜு ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சந்த்ருத் மிஸ்ரா, நவீன் பட்நாயக்கின் அரசியல் செயலர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் 24 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பிஜு ஜனதா தளம் 2024 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

குறிப்பாக, மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதையடுத்தே, தற்போது மாநில நிர்வாகிகளை கூண்டோடு கலைத்து அக்கட்சியின் தலைவர் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in