Published : 09 Jul 2024 06:19 AM
Last Updated : 09 Jul 2024 06:19 AM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதில் ஹிஸ்புல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 ராணுவ வீரர்கள்வீரமரணம் அடைந்தனர்.
தேடுதல் வேட்டையின் போதுஒரு வீட்டுக்குள் ராணுவ வீரர்கள் புகுந்து தீவிரவாதிகளைத் தேடினர்.அங்கு சந்தேகப்படும்படி யாரும்இல்லை. ஆனால், வீடு முழுவதும்தேடிய போது அங்கு அமைக்கப்பட்டிருந்த அலமாரிகள் சந்தேகத்தை ஏற்படுத்தின. உடனடியாக சுவரில் பதிக்கப்பட்டிருந்த அலமாரிகளை திறந்து பார்த்தனர். அப்போது கீழ் பகுதியில் ஒரு அறை கான்கிரீட்டில் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அந்த பதுங்கு அறையில்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பதுங்கு அறையின் வீடியோவை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டனர். மேலும், தீவிரவாதிகளுக்கு உள்ளூர் மக்கள் தஞ்சம் அளித்து உதவி செய்தார்களா என்பது குறித்து பாதுகாப்புப் படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், காஷ்மீரில் சனிக்கிழமை நடைபெற்ற 2 என்கவுன்ட்டரில் மொத்தம் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் டிஜிபி ஆர்.ஆர்.ஸ்வைன் கூறும்போது, ‘‘இரண்டுஎன்கவுன்ட்டரில் 6 தீவிரவாதிகளை கொன்றது மிகப்பெரிய முன்னேற்றமாக அமைந்துள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, அமைதியை நிலைநாட்டுவது போன்ற முக்கிய விஷயங்களில் இந்த நடவடிக்கை உண்மையில் மிகப்பெரிய முன்னேற்றம்தான்’’ என்றார்.
பிரிகேடியர் பிரித்விராஜ் சவுகான் நேற்று கூறியதாவது: தெற்கு காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட இரு வேறு என்கவுன்ட்டர்களில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது, ஹிஸ்புல்முஜாகிதீன் அமைப்பின் செயல்பாட்டுக்கு பெரும் பின்னடைவாக அமையும். சினிகம் ஆபரேஷனில் நமது ராணுவ வீரர் பிரபாகர் பிரவீன் தேசத்துக்காக மகத்தான உயிரை தியாகம் செய்துள்ளார்.
பல நாட்களாக இப்பகுதியில் கண்காணிப்பு கருவிகளின் உதவியுடன் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை ராணுவம் கண்காணித்து வந்தது. இந்த நிலையில் ஜூலை 6-ம் தேதி கிடைத்த தகவலின் பேரில் ராணுவம் 2 நாட்கள் நடத்திய தீவிரதேடுதல் வேட்டையில் இருவேறு இடங்களில் இரண்டு என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றன. ராணுவத்துக்கும் ஹிஸ்புல் அமைப்பைக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் அந்த அமைப்பைச் சேர்ந்த6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது, ஜம்மு-காஷ்மீரில் அவர்களின் இயக்கத்துக்கு பலத்த அடியாக இருக்கும். இவ்வாறு பிரித்விராஜ் சவுகான் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: இதனிடையே நேற்று பிற்பகல் ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டம்மச்செடி பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து திடீர்தாக்குதல் நடத்தினர். இதில், 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 6 வீரர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து தாக்குதல் நடந்த பகுதியை சுற்றி வளைத்துள்ள ராணுவத்தினர் தீவிரவாதிகளை தேடும் பணியை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜம்முபகுதியில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது கடந்த 48 மணி நேரத்தில் இது 2-வதுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT