Published : 14 May 2018 08:32 AM
Last Updated : 14 May 2018 08:32 AM

அமெரிக்க ராணுவத்தை பின்பற்றி ராஜஸ்தானில் ‘ஏர் கேவல்ரி’ போர் பயிற்சி

அமெரிக்க ராணுவத்தை பின்பற்றி இந்திய ராணுவம் ‘ஏர் கேவல்ரி’ போர் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு சார்பில் ராஜஸ்தானின் சூரத்கருக்கு அருகில் உள்ள பாலைவன பகுதியில் ‘விஜய் பிரஹார்’ எனும் போர் பயிற்சி நடைபெற்றது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற இந்த போர் ஒத்திகை கடந்த 9-ம் தேதி நிறைவு பெற்றது. இதில் ‘ஏர் கேவல்ரி’ எனப்படும் தரை, வான்வழி தாக்குதல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 1955 முதல் 1975 வரை நடைபெற்ற வியட்நாம் போரில் அமெரிக்க ராணுவம் ‘ஏர் கேவல்ரி’ எனப்படும் போர் முறையைப் பின்பற்றியது. அதாவது ஒரே நேரத்தில் எதிரிகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழி தாக்குதலும் டாங்கிகள், வீரர்கள் மூலம் தரைவழி தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்த போர் முறையைப் பின்பற்றி இந்திய ராணுவம் தற்போது ‘ஏர் கேவல்ரி’ பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மேற்கு படைப்பிரிவு செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கர்னல் மணீஷ் ஓஜா கூறியதாவது: ‘விஜய் பிரஹார்’ போர் ஒத்திகையின்போது ‘ஏர் கேவல்ரி’ பயிற்சியை நடத்தினோம். இதன்மூலம் தரையில் பதுங்கியிருக்கும் எதிரிகள் மீது ஒரே நேரத்தில் வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல் நடத்த முடியும். ராணுவத்தின் டாங்கிகள், வீரர்களுடன் இணைந்து ஹெலிகாப்டர்களும் பயிற்சியில் பங்கேற்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து ஏஎச்-64இ அப்பாச்சி ரகத்தைச் சேர்ந்த 6 போர் ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவம் விரைவில் வாங்க உள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்டில் ரூ.4,168 கோடி நிதியை ஒதுக்கியது. இந்த வகை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக் போரின்போது பயன்படுத்தப்பட்டன.

மேலும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்தும் போர் ஹெலிகாப்டர்களை ராணுவம் வாங்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x