உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிட ஒப்புதல்

உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிட ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சரக்கரை, உப்பு, கொழுப்பு சத்து அளவுகளை பெரிய எழுத்தில் அச்சிடும் திட்டத்துக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ள பாக்கெட்உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதுதான் பல நோய்களுக்கு காரணம் எனவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

விதிகளில் திருத்தம்: அதனால் உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சரக்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை எவ்வளவு சதவீதம் உள்ளன என்பதைபெரிய எழுத்துகளில் அச்சிட வேண்டும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு எப்எஸ்எஸ்ஏஐ ஒப்புதல் அளித்துள்ளது. உணவு ஆணையத்தின் 44-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மூலம் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஒழுங்குமுறைகளில் திருத்தம் செய்யப்படும்.

இந்த திருத்தம் மூலம் நுகர்வோர், தாங்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டசத்து விவரங்களை எளிதில் அறிந்து தங்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையில் இந்த உணவுப் பொருள் உள்ளதா என எளிதில் முடிவெடுக்க முடியும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த திருத்தம் தொடர்பான திட்டத்தை எப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்துஆலோசனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கெட் உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் ‘ஹெல்த் டிரிங், ‘100% பழச்சாறு’ என தவறான தகவல்களை வெளியிடுவதை தடுக்க எப்எஸ்எஸ்ஏஐ அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in