Published : 14 Aug 2014 06:15 PM
Last Updated : 14 Aug 2014 06:15 PM

மதவாத கலவரங்களை பாஜக தூண்டுகிறது: மக்களவையில் முலாயம் குற்றச்சாட்டு

உத்திரப் பிரதேசத்தில், பாஜக கலவரங்களை தூண்டிவிடுகிறது என்று மக்களவையில் சமாஜ்வாதித் தலைவர் முலாயம் சிங் குற்றம்சாட்டினார்.

மேலும் சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தின் முசாபர் நகர், சஹாரன்பூர் ஆகிய இடங்களில், நடந்தது இருப்பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தான், கலவரம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், மக்களவையில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் வதவாத கலவரங்கள் அதிகரித்துள்ளதாகவும், உத்திரப்பிரதேச கலவரத்தையும் பாஜகவே தூண்டிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்,

இந்த நிலையில் இன்று மக்களவையில் மதவாத கலவரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சமாஜ்வாதித் தலைவர் முலாயம் சிங் யாதவ், "உத்திரப் பிரதேச கலவரங்களுக்கு பாஜக தான் காரணம் அல்லது பாஜக தான் பின்னணியில் இருந்து அதனை இயக்குகிறது" என்றார்.

முலாயம் சிங்கின் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து கூச்சலிட்டனர். இதனை அடுத்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, உறுப்பினர்களின் பேசும்போது, மற்றவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய முலாயம் சிங், "முசாபர்நகர் கலவரம் மதவாத கலவரம் அல்ல, இருப் பிரிவினரிடையான பிரச்சினை தான் அது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மற்ற ஜாதியினருக்கும் ஏற்பட்ட மோதலில் சிலர் உயிரிழந்தனர்.

சஹாரன்பூரில் கலவரமும் அது போன்றது தான். குறிப்பிட்ட நிலத்தில், குருத்வாரா கட்டுவதா அல்லது மசூதி கட்டுவதா என்பதே அவர்களின் பிரச்சினை. இருத்தரப்பினருக்குமான மோதலில் சிலர் கொல்லப்பட்டதால், பிரச்சினை பெரிதானது.

ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் நிலைமை சீரடைந்துவிட்டது. இது போல வேறு எந்த மாநிலத்தில் நடந்தாலும், அதனை குறைந்த நேரத்தில் கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை.

வகுப்புவாதம் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது. சிறிய விஷயங்களுக்காக, வகுப்புவாதம் ஏற்படுவது நாட்டிற்கு நல்லது அல்ல.

நாட்டில் நடக்கும் வகுப்புவாத கலவரங்களுக்கு 2 காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இருத்தரப்பிலும் நம்பகத்தன்மை குறைவது, மற்றொன்று, இங்கிருக்கும் சிறுபான்மையினருக்கு போதிய வசதிகள் இல்லாதது.

நாட்டில் ஒற்றுமை குறைந்துவிட்டது. இதனால் மதவாத வன்முறைகள் குறித்து ஆராய குழு ஒன்றை அமைக்க வேண்டும்" என்றார்.

இதனை அடுத்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர்,முகமது அஸ்ரருல் ஹேக், "தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், சிறுபான்மையினர் தங்களது பிரச்சினைகளை தாங்கி கொள்ள தான் வேண்டி உள்ளது.

மதவாத பிரச்சினைகளில் ஈடுபடுவோர் கண்டிக்கப்படுவதில்லை. சிறுபான்மையினர் அச்சத்தில் தான் வாழ்க்கையை நடத்துகின்றனர். மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மதவாத தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஷிரோமனி அகாலி தளக் கட்சி உறுப்பினர் பிரேம் சிங்கும் அதனையே வலியுறுத்தினார். அவர் பேசும்போது, " குறிப்பிட்ட மதத்தின் மீது பற்றுக்கொள்வதால் பிரச்சினை ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட மததின் மீது வெறுப்புணர்வை காட்டுவதால் தான் மதவாதம் ஏற்படுகிறது.

இஸ்லாமியர்கள், இந்துக்கள் மட்டுமல்ல, சீக்கியர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் மதிக்கப்பட வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x