

புதுடெல்லி: ஹாத்ரஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் கைதான முக்கிய குற்றவாளியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீஸார், பாரதிய நியாயசன்ஹிதா சட்டத்தின் பிரிவான மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த2 பெண் உள்பட 6 பேர் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுகர் என்பவர் தலைமறைவானார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, தேவபிரகாஷ் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாகவும் உ.பி போலீஸார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், தேவபிரகாஷ் டெல்லியின் உத்தம்நகரின் நஜப்கார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக உ.பி. போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு சென்ற போலீஸார், தேவபிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவரை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக தேவபிரகாஷ் மதுகரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங்கூறும்போது, ‘‘மதுகர் உ.பி. போலீஸாரிடம் சரணடைந்தார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். ஆன்மிகச் சொற்பொழிவு மாநாட்டு ஏற்பாடுகள் விஷயத்தில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை’’ என்றார்.
அகிலேஷ் குற்றச்சாட்டு: இதுகுறித்து உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ்கூறும்போது, “உ.பி.யில் பாஜகஅரசு அமைந்தது முதல் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் முந்தைய சம்பவங்களில் இருந்து பாஜக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தன்னுடைய தவறுகளை மூடி மறைக்க ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக சிலரை போலீஸார் கைது செய்துள்ளளனர். தவறுகளை மக்களிடம் இருந்து மறைக்க இந்த நாடகத்தை பாஜக அரசு ஆடி வருகிறது" என்றார்.
போலே பாபா கருத்து: தலைமறைவாக இருக்கும் சாமியார் போலே பாபா வீடியோ வாயிலாக வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
ஹாத்ரஸில் நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனைஅளிக்கிறது. அரசு மற்றும் நிர்வாகத்தின் மீது தயவு செய்து நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தப்ப முடியாது எனநான் நம்புகிறேன். பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்கும்படி என் குழுஉறுப்பினர்களை நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
ஹாத்ரஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் மாவட்ட வாரியாக எங்களிடம் உள்ளது. நாராயண் சாக்கர் ஹரி அறக்கட்டளை மூலம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும். அவர்களது குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், திருமணச் செலவுகளை நாங்கள் வழங்கவுள்ளோம்.
இந்த சம்பவம் தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தேவபிரகாஷ் மதுகரை போலீஸார் கைது செய்யவில்லை. மாறாக நாங்களாகவே முன்வந்து அவரை சரண் அடையுமாறு கூறியுள்ளோம். இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை இறைவன் நமக்குத் தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.