

லக்னோ: உத்தர பிரதேசத்தின் காஸ்கன்ச் மாவட்டம், பட்டியால் கிராமத்தை சேர்ந்த போலே பாபாவுக்கு அந்தமாநிலம் முழுவதும் 24 ஆசிரமங்கள் உள்ளன. கடந்த 2-ம் தேதி ஹாத்ரஸ் மாவட்டம், முகல் கார்கி கிராமத்தில் போலே பாபாவின் ஆன்மிக கூட்டம் நடைபெற்றது. அங்குள்ள காலி மைதானத்தில் கூட்டம் நடந்தது. சுமார் 80,000 பேர்மட்டுமே மைதானத்தில் அமர இடம் இருந்த நிலையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
ஆன்மிக கூட்டம் நிறைவடைந்து சாமியார் போலே பாபா அங்கிருந்து புறப்பட்டதும் மைதானத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 112 பெண்கள், 7 குழந்தைகள் உட்பட 123 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து உத்தர பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. அந்த குழு சுமார் 100 பேரிடம் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலே பாபா ஆசிரமங்களின் தலைமை நிர்வாகி தேவ் பிரகாஷ் மாத்தூர் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வழக்கில் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டு இருக்கும் மாத்தூர் ராஜஸ்தானில் பதுங்கி இருக்கக்கூடும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த மாநிலத்தில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
சாமியார் போலே பாபாவின் பெயர், முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. தலைமறைவாக உள்ள அவரையும் போலீஸார்தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் ராஜஸ்தானில் பதுங்கியிருக்கக்கூடும் அல்லது உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது ஆசிரமங்களில் தலைமறைவாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே உத்தர பிரதேசத்தின் கான்பூர், எட்டாவா, நொய்டா, காஸ்கஞ்ச், ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் ஆசிரமங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உ.பி.,போலீஸார் கூறியதாவது: சாமியார் போலே பாபா, தனியாக பாதுகாப்பு படைகளை வைத்துள்ளார். இதில் 100 பேர் அடங்கிய கருப்பு பூனை படை வீரர்கள் 24 மணி நேரமும் அவருக்குபாதுகாப்பு வழங்கி வந்தனர். அதோடு 5,000 பேர் அடங்கிய பிங்க் படையும் அவரிடம் உள்ளது. இந்த படை வீரர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவர். மேலும் இளம்பெண்கள் மட்டுமே அடங்கிய கோபியர் படையும் போலே பாபாவிடம் உள்ளது.
சாமியாரின் ஆசிரமங்கள், ஆன்மிக கூட்டம் நடைபெறும் இடங்களில் போலீஸார் அனுமதிக்கப்படுவது கிடையாது. அவரது கருப்பு பூனை, பிங்க் படை, கோபியர் படையே பாதுகாப்பு பணியில் ஈடுபடும். கூட்ட அரங்குக்கு வெளியேதான் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
இதன் காரணமாகவே கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. போலே பாபாவை அதிதீவிரமாக தேடி வருகிறோம். அவரது ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி தேவ் பிரகாஷ் மாத்தூர் உட்பட பலரை பல்வேறு மாநிலங்களில் தேடி வருகிறோம்.
ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது சாமியார் போலே பாபாவும்அவரது நிர்வாகிகளும் ராஜஸ்தானில் பதுங்குவது வழக்கம். இதன் அடிப்படையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், தெளசா உள்ளிட்ட பகுதிகளில் உத்தர பிரதேச போலீஸார்முகாமிட்டு உள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.