Published : 05 Jul 2024 06:35 AM
Last Updated : 05 Jul 2024 06:35 AM
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை விஸ்வ ஹரி நாராயண் (எ) போலே பாபா என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது நெரிசலில் 121 பேர் இறந்தது தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், போலே பாபா பெயர் அதில் இடம்பெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது.தற்போது அவர் நிறைய சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம். 13 ஏக்கரில் அவர் 5 நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமத்தை கட்டியுள்ளார். அந்த ஆசிரமம் அமைந்துள்ள இடம் மட்டும் ரூ.4 கோடி மதிப்புள்ளது.
ஆசிரமத்தில் பல அறைகள் உள்ளன. விலை உயர்ந்த பொருட்கள் மூலம் அறைகள் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. அறைகளில் எல்லாவசதிகளும் உள்ளன. போலே பாபாவின் உண்மையான பெயர்சூரஜ் பால். இதற்கு முன் காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றியுள்ளார். அவரது ஆசிரமத்தில் 12 அறைகள் உள்ளன. அவற்றில் 6 அறைகளை போலே பாபா பயன்படுத்தி வந்துள்ளார். மற்ற 6 அறைகளில் தன்னார்வலர்கள், கமிட்டி உறுப்பினர்கள், விவிஐபி.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரமத்துக்கு தனி சாலை வசதியும் உள்ளது. அத்துடன் கலை நுணுக்கங்களுடன் ஆசிரமம்கட்டப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலத்தை தனக்கு பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கினர் என்று போலே பாபாகூறியுள்ளார். ஆனால், ஆவணங்களை ஆய்வு செய்த போது, அவருக்கு மேலும் பல சொத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவை கோடிக்கான ரூபாய் மதிப்புள்ளவை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலே பாபா மீது ஆக்ரா, எடாவா, காஸ்கஞ்ச, பரூக்காபாத் மற்றும் ராஜஸ்தானில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT