ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தில் 6 பேர் கைது: முக்கிய குற்றவாளி பற்றிய தகவலுக்கு ரூ.1 லட்சம் பரிசு

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தில் 6 பேர் கைது: முக்கிய குற்றவாளி பற்றிய தகவலுக்கு ரூ.1 லட்சம் பரிசு
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 121 உயிரிழந்தனர். போலே பாபாதலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

போலே பாபா தனது வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், “நிகழ்ச்சி முடிந்தவுடன் நான்அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டேன். அங்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. சமூகவிரோதிகள் சிலர் இந்த நெரிசல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

போலே பாபாவின் வழக்கறிஞர்ஏ.பி.சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “உ.பி. அரசின் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.

இந்நிலையில் அலிகர் மண்டல போலீஸ் ஐ.ஜி. ஷலாப் மாத்தூர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘போலே பாபாவின் முக்கிய நிர்வாகக் குழுவில் உள்ள 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 பேரைபிடித்து விசாரித்து வருகிறோம். முக்கியக் குற்றவாளியான தேவ் பிரகாஷ் மாத்தூர் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும். முதல் தகவல் அறிக்கையில் போலே பாபா பெயர் இல்லாதது குறித்து கேட்கிறீர்கள். விசாரணையில் போலே பாபாவும் காரணம் என தெரிந்தால் அவரையும் பிடித்து விசாரிப்போம்” என்றார்.

இதனிடையே பாபாவின் மெயின்புரி ஆசிரமத்தில் 17 வருடங்களாக பணியாற்றுபவரின் மகனானரஞ்சித்சிங் என்பவர் ஆங்கில செய்திசேனலுக்கு அளித்த பேட்டியில் “பாசாங்கு செய்யும் பாபாவுக்கு எந்தவித சிறப்பு சக்தியும் இல்லை. சீடர்கள் எனும் பெயரில் சுமார் 17 வயதாகும் இளம்பெண்கள் அவரது ஆசிரமத்தில் தங்கியுள்ளனர்.அவர்களை பாபா தவறாகப் பயன்படுத்துகிறார்” என்று புகார் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in