

புதுடெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால், ஒருநாள் மணிப்பூர் மக்கள் உங்களை நிராகரித்துவிடுவார்கள் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த 27-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். மக்களவையில் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு நேற்று முன்தினம் பதில் அளித்த பிரதமர் மோடி, மாநிலங்களவையில் நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
பாபா சாஹிப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். அரசியல் சாசனம் என்பது விதிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தை, உணர்வையும் மதிக்கிறேன். அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட தினமான நவம்பர் 26-ம் தேதியை ஆண்டுதோறும் அரசியல் சாசன தினமாக கொண்டாட நாங்கள்தான் நடவடிக்கை எடுத்தோம். இப்போது அரசியல் சாசனம் பற்றி பேசுபவர்கள், ‘ஏற்கெனவே குடியரசு தினம் இருக்கும்போது இதை இன்னொரு நாள் கொண்டாட தேவையில்லை’ என எதிர்ப்பு தெரி வித்தனர்.
இவ்வாறு பிரதமர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்க அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறுத்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். பொய்யை பரப்புபவர்களுக்கு, உண்மையை கேட்க சக்தி இல்லை. விவாதத்தின்போது எழுப்பிய கேள்விகளுக்கான பதிலை கேட்கவும், உண்மையை எதிர்கொள்ளவும் துணிச்சல் இல்லாதவர்கள் வெளிநடப்பு செய்கின்றனர். இதன்மூலம் இந்த அவையை அவர்கள் அவமதிக்கின்றனர்.
கோஷம் எழுப்பிவிட்டு வெளிநடப்பு செய்வது அவர்களது வழக்கமாகிவிட்டது. இவ்வாறு கூச்சலிடுவதால்தான் நாட்டு மக்கள் அவர்களை தேர்தலில் தோற்கடித்தனர்.
அரசியல் சாசனம் குறித்து பேச விரும்பும் அவர்கள், அவசரநிலை குறித்து பேச மறுக்கின்றனர். அரசியல் சாசனத்தின் மிகப்பெரிய எதிரியே காங்கிரஸ்தான்.
மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்வதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒருநாள் மணிப்பூர் உங்களை (காங்கிரஸ்) நிராகரித்துவிடும். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது. வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகின்றன.
இவ்வாறு பிரதமர் கூறினார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநிலங்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கு குடிநீர் வழங்கிய மோடி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் பதில் அளித்தபோது, அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர், மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர்.
இதனால், உரையை நிறுத்திவிட்டு அமைதியாக நின்றிருந்த பிரதமர், தனது இருக்கையின் அருகே, அவையின் மையப் பகுதியில் நின்று கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி. ஒருவருக்கு குடிநீர் கொடுத்தார். ‘வேண்டாம்’ என்று கூறி மறுத்த அவர் கைகூப்பி நன்றி தெரிவித்தார். அதற்குள், வேறொரு எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர், பிரதமர் கொடுத்த குடிநீரை வாங்கி குடித்தார். பிரதமரும் தன்னிடம் இருந்த குடிநீரை அருந்திவிட்டு, உரையை தொடர்ந்தார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.