Published : 04 Jul 2024 05:48 AM
Last Updated : 04 Jul 2024 05:48 AM

4 மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.327 கோடி போதைப் பொருள் பறிமுதல்

தானே: மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தெலங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற சோதனையில் ரூ.327கோடி மதிப்பிலான எம்டி போதைப்பொருள் மற்றும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து மகாராஷ்டிராவின் மிரா பயாந்தர் - வசாய் விரார் காவல்துறை ஆணையர் மதுக்கர் பாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது:

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் செனா கான் என்றஇடத்தில் குற்றப் பிரிவு போலீஸார் கடந்த மே 15-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது 1 கிலோ மெபட்ரான் (எம்டி) என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி. இது தொடர்பாக பால்கர் மாவட்டத்தின் வசாய் பகுதியைச் சேர்ந்த இருவர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உத்தர பிரதேசம், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து மிகப் பெரிய நெட்வொர்க் இயங்கி வந்தது தெரியவந்தது.

தெலங்கானாவில் நரசாபூர் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் போலீஸார் நடத்திய சோதனையில் 103 கிராம் எம்டி போதைப் பொருளும், ரூ.25 கோடி மதிப்புள்ள மூலப் பொருட்களும் சிக்கின. அங்கிருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின் உ.பி. வாரணாசியில் நடத்திய சோதனையில் 71 கிராம் எம்டி போதைப் பொருள் சிக்கியது. உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் என்ற இடத்தில் இயங்கிய போதைப் பொருள் தொழிற்சாலையில் 300 கிலோ மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.300 கோடி. இங்கு பணியாற்றிய 3 பேரும் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலில் தொடர்புடைய நபர் குஜராத்தின் சூரத் நகரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் ரூ.10.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருள் விற்பனையில் கிடைத்த பணம் எல்லாம் கூரியர் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. மும்பையில் இருகூரியர் நிறுவனத்தில் சோதனையிட்டு ரூ. 6,80,200 மீட்கப்பட்டது. இந்த கடத்தலில் தொடர்புடைய பால்கரைச் சேர்ந்த நபரிடம் 4 கைத் துப்பாக்கிகள் மற்றும் 33 குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

எம்டி போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய இன்னும் பலர் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

இவ்வாறு மதுக்கர் பாண்டே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x