அசாம் வெள்ளம்: 28 மாவட்டங்களில் 11.34 லட்சம் மக்கள் பாதிப்பு; 38 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

குவஹாதி: அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று பேர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர்களில் இருவர் தின்சுகியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் தேமாஜி மாவட்டத்தை சேர்ந்தவர்.

அசாமில் செவ்வாய்க்கிழமை அன்று வெள்ளத்தின் நிலை தீவிரமடைந்தது. அங்கு 28 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 11.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காம்ரூப், தமுல்பூர், சிராங், மோரிகான், லக்கிம்பூர், பிஸ்வநாத், திப்ருகார், கரீம்கஞ்ச், உடல்குரி, நாகோன், போங்கைகான், சோனித்பூர், கோலாகாட், ஹோஜாய், தர்ராங், சாரெய்டியோ, நல்பாரி, ஜோர்ஹாட், சிவசாகர், கர்பி அங்லோங், தேமாஜி, மஜூலா, தின்சுகியா, கோக்ரஜார், பார்பெட்டா, கச்சார், கம்ரூப் (எம்) ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் லக்கிம்பூர் மாவட்டத்தில் சுமார் 1.65 லட்சம் பேர், தர்ராங் மாவட்டத்தில் 1.47 லட்சம் பேர், கோலாகாட், தின்சுகியா, தேமாஜி போன்ற மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிஸ்வநாத், மஜூலா, சோனித்பூர் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் 42,476 விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இரண்டாவது முறையாக ஏற்பட்ட வெள்ளத்தில் 2,208 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதி அதன் அபாய கட்டத்தை கடந்து பாய்ந்து கொண்டுள்ளது. 489 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் லட்சக்கணக்கான மக்கள் அடைக்கலம் கொண்டுள்ளனர்.

வெள்ள நீர் மக்களின் வீடுகளை சூழ்ந்துள்ள நிலையில் உயரமான நிலங்கள், பள்ளி கட்டிடங்கள், பாலங்கள் போன்ற இடங்களில் மக்கள் சிலர் தஞ்சம் கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு, சமையல் எண்ணெய் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. அதோடு அவர்களது கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அந்த மாநிலத்தில் வெள்ளத்தால் சுமார் 8 லட்சம் கால்நடைகள் பதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை அன்று ஏற்பட்ட வெள்ளத்தால் 74 சாலைகள், 6 பாலங்கள் மற்றும் 14 அணைக்கரைகள் சேதமடைந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in