உ.பி. நெரிசல் சம்பவம்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

உ.பி. நெரிசல் சம்பவம்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Updated on
1 min read

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 116 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “உத்தர பிரதேசத்தின் ஹாத்தரஸில் நடந்த துயரமான விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளையும் உ.பி. மாநில அரசு செய்து வருகிறது. இந்த விபத்தில் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு என்னுடைய அனுதாபங்களை தெரிவிக்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் வேண்டுகிறேன்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில், “உத்தர பிரதேசத்தின் ஹாத்தரஸில் ஏற்பட்ட நெரிசலில் பலரும் இறந்த செய்தியை கேட்டு மிகுந்து துயரமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த கடினமான தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நிற்போம்” என்று கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in