

புதுடெல்லி: நாடாளுமன்ற விதிகள், நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பின்பற்றுமாறும், ஒரு நல்ல எம்பியாக உருவாக இவை முக்கியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கூட்டம் இன்று (ஜூலை 2) காலை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, ஹெச்.டி. குமாரசாமி, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பிரதமர் இன்று எங்களுக்கு ஒரு மந்திரத்தை அளித்துள்ளார். அது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு எம்.பி.யும் தேசத்துக்குச் சேவை செய்யவே அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கட்சி வேறுபாடின்றி. நாட்டுக்குச் சேவை செய்வதே நமது முதல் பொறுப்பு. இதில் ஒவ்வொருவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
தங்கள் தொகுதியின் விஷயங்கள், மற்ற முக்கிய விஷயங்களில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற விதிகள், நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பின்பற்றுமாறும் நல்ல எம்.பி.யாக மாறுவதற்கு இவை அவசியம் என்றும் கூறினார். இந்த மந்திரத்தை கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம்.
பிரதமர் ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். ஒவ்வொரு எம்.பி.யும், தங்கள் குடும்பத்தினருடன், பிரதமர் சங்கரஹாலயா (பிரதமர் அருங்காட்சியகம்)-வுக்கு செல்ல வேண்டும். அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லாமல், ஒவ்வொரு பிரதமரின் பங்களிப்பையும் முழு தேசமும் தெரிந்துகொள்ளவும், அதைப் பாராட்டவும், அதிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இதுவே முதல் முயற்சி” என தெரிவித்தார்.
நாட்டின் பிரதமர் பேசும்போது, அவர் நாட்டின் பிரதமர் என்பதால், எம்.பி.க்கள் மட்டுமின்றி, அனைவரும் அதை முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கிரண் ரிஜிஜு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிரதமர் ஆகி வரலாறு படைத்திருக்கிறார் என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், நேற்று மக்களவையில் ராகுல் காந்தி நடந்துகொண்ட விதம், சபாநாயகர் பக்கம் திரும்பி, விதிகளை மீறி பேசியது, சபாநாயகரை அவமதித்த விதம் அகியவற்றை பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் செய்யக்கூடாத ஒன்று எனவும் கூறினார்.
தேசிய ஜனநாயக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, “அனைத்து எம்.பி.க்களும் சபையில் இருக்குமாறும், நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார். மேலும் அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தினார். மக்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியின் உரைக்கு பிரதமர் மோடி இன்று மக்களவையில் பதில் அளிப்பார்” என தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தனது உரையின் சில பகுதிகளை நீக்கியது குறித்து அதிருப்தி தெரிவித்தார். மேலும் அவர், "மோடியின் உலகில், உண்மையை அழிக்க முடியும், ஆனால் உண்மையில், உண்மையை அகற்ற முடியாது. நான் சொல்ல வேண்டியதை நான் சொன்னேன். அதுதான் உண்மை. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நீக்கலாம். உண்மை அதுதான்” எனக் குறிப்பிட்டார்.