“ராகுல் பாஜகவை விமர்சித்தார்; இந்துக்களை அல்ல” - பிரியங்கா காந்தி கருத்து

பிரியங்கா காந்தி | கோப்புப்படம்
பிரியங்கா காந்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, அவையில் நேற்று (ஜூலை 1) பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பேசினார். அப்போது ஆளும் பாஜக மற்றும் ராகுல் காந்திக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தனது பேச்சின்போது, “இந்துக்கள் வன்முறை, வெறுப்பை பரப்புவது இல்லை. ஆனால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர்” என ராகுல் காந்தி தாக்கி பேசினார். வன்முறையை மதத்துடன் இணைப்பது தவறு என சொல்லிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தச் சூழலில் அவரது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். “ராகுல், இந்துக்களை அவமதிக்கவில்லை. அவர் தனது உரையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். பாஜக குறித்தும், பாஜக தலைவர்கள் குறித்தும் தான் அவர் பேசி இருந்தார்” என தெரிவித்தார்.

மேலும், எக்ஸ் தள பதிவு ஒன்றில் பிரியங்கா காந்தி, “பணவீக்கத்தை எண்ணி பெண்களும், கருப்புச் சட்டங்களை எண்ணி விவசாயிகளும், அக்னிவீரர் திட்டத்தை எண்ணி இளைஞர்களும், வினாத்தாள் கசிவை எண்ணி மாணவர்களும், தங்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை எண்ணி சிறுபான்மை மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்ச உணர்வை எங்கும், எதிலும் பரப்புகிறது. மக்கள் மத்தியில் அச்சம், வன்முறை மற்றும் வெறுப்பினை பரப்பும் யாரும் அதன் ஊடாக பலன் அடைய முடியாது. பாஜக இந்த பாணி அரசியலை இப்போது நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in