கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published on

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்‍பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு,ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி, வீராஜ்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் பெய்துவரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குடகில் தொடரும் கனமழையால் மண்டியாவில் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரத்து 340 கன அடியாக இருந்தது.

கபினி அணைக்கு 5 ஆயிரத்து 560 கன அடி நீரும், ஹாரங்கி அணைக்கு 1673, ஹேமாவதி அணைக்கு 6 ஆயிரத்து 695 கன அடி நீரும் வந்து கொண்டிருப்பதாக காவிரி நீர்ப்பாசன கழகம் அறிவித்துள்ளது.

4 அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மைசூரு, மண்டியா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in