Last Updated : 05 May, 2018 05:45 PM

 

Published : 05 May 2018 05:45 PM
Last Updated : 05 May 2018 05:45 PM

‘மகதாயி ஆறு விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது’: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கோவா மாநிலத்துடன் மகதாயி ஆற்றுநீரைப் பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக அரசியல் செய்துவருகிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகத்தின் பெலஹாவி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி பிம்ஹாட் பகுதியில் இருந்து மஹதாயி ஆறு உற்பத்தியாகிறது. 77 கி.மீ தொலைவு பாய்ந்து செல்லும் ஆறு அதாவது, கர்நாடகாவில் 29 கி.மீ தொலைவும், கோவாவில் 52 கி.மீ தொலைவும் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.

இந்த மஹதாயி ஆற்றில் இருந்து கூடுதலாக 7.6 டிஎம்சி நீரைத் திறந்து விட வேண்டும், கடக், பாஹல்கோட், பெலகாவி, தார்வாட் ஆகிய பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் போக்க திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக அரசு முன்வைத்தது. ஆனால், அதற்கு கோவா மறுத்துவருகிறது.இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே ஆற்றுநீர் பங்கீடு இருந்து வருகிறது.

கர்நாடகவுக்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி பிரச்சினை முக்கியமாக இருக்கிறதோ அதுபோல் கோவாவுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே மஹதாயி நீர் பிரச்சினை இருந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் கலாபுர்க்கியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, நாங்கள் கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றால், கோவா மாநிலத்துடன் பேசி மஹதாயி ஆற்றுச் சிக்கலைத் தீர்ப்போம். நீண்டகாலமாக இருக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காடக் நகரில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மஹாதாயி ஆறுபிரச்சினை குறித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

கர்நாடகத்துக்கும், கோவா மாநிலத்துக்கும் இடையே நீண்ட காலமாக மஹதாயி ஆற்றுநீர் பங்கீட்டுப் பிரச்சினை இருந்து வருகிறது. ஆனால், இந்த மஹதாயி ஆற்றுநீர் பங்கீட்டு பிரச்சினையில் காங்கிரஸ் அரசு மக்களைத் தவறாக வழிநடத்தி வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மஹதாயி ஆற்றுநீர் ஒருபோதும் கர்நாடகாவுக்கு பிரித்துக்கொடுக்கப்படாது என்று பேசினார்.

கர்நாடகாவுக்கு மஹதாயி ஆற்றுநீரை வழங்கக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவான மனநிலையில் இருக்கிறது. இந்த ஆற்றுநீர் பங்கீட்டு பிரச்சினையில், காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிறம் தெரிந்துவிடும்.

தென் மாநிலங்களில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி இயற்கை வளங்களை எல்லாம் கொள்ளையடிக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை எல்லாம் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் மிகப்பெரிய தொட்டியில் கொட்டி வைத்து, அங்கிருந்து பைப் மூலமாக டெல்லிக்குக் கொண்டு செல்கிறது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்டது, இதில் கர்நாடகாவிலும் வெல்ல முயற்சிக்கிறது. கர்நாடகாவிலும் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அவ்வாறு தோற்றுவிட்டால், டெல்லியில் உள்ள தலைவர்களுக்கு என்ன ஆகும் என்று வருந்துகிறது.

ஒருவேளை மே15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி தோற்றால், இந்திய தேசிய காங்கிரஸாக இருக்காது பஞ்சாப், புதுச்சேரி பிரதேச காங்கிரசாகத்தான் இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x