18 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த அண்ணன் பால்கோவிந்துக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு வரவேற்ற தங்கை ராஜ்குமாரி.
18 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த அண்ணன் பால்கோவிந்துக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு வரவேற்ற தங்கை ராஜ்குமாரி.

உ.பி.யில் காணாமல் போன அண்ணனை 18 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடித்த தங்கை: ரீல்ஸ் வீடியோவில் உடைந்த பல் அடையாளம் காட்டியது

Published on

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டம், இனியாத்பூரை சேர்ந்தவர் சன்யாலி. இவரது மனைவி ராம்காளி. இந்த தம்பதிக்கு பால்கோவிந்த், தீரஜ், மணீஷ் ஆகிய 3 மகன்களும், ரேகா, ராஜ்குமாரி, சுலேகா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு சன்யாலியின் மூத்த மகன் பால்கோவிந்த் 15 வயதில் வேலைக்காக மும்பை சென்றார். அவரோடு, நண்பர்கள், உறவினர்கள் என பலர் மும்பைக்கு சென்றிருந்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு அனைவரும் ஊருக்கு திரும்பினர். அப்போது பால்கோவிந்த் தவறுதலாக வேறு ரயிலில் ஏறி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு சென்று விட்டார். மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல போதிய பணம் இல்லாத நிலையில் அங்கேயே தங்கி கிடைத்த வேலைகளை செய்து வந்தார்.அங்கு ஈஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து தங்கிவிட்டார். தற்போது அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பால்கோவிந்த் அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த வீடியோக்களை அவரது தங்கை ராஜ்குமாரி அண்மையில் பார்த்தார். பால்கோவிந்த் சிறுவனாக இருக்கும்போது முன்பகுதி பல் உடைந்தது. அந்த உடைந்த பல், அண்ணனின் முகத்தோற்றத்தின் அடிப்படையில் அவர்தான் தொலைந்துபோன தனது அண்ணன் என்பதை ராஜ்குமாரி உறுதி செய்தார். குடும்பத்தினரும் அவரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து சமூகவலைதளம் வாயிலாக பால்கோவிந்தின் செல்போன் எண்ணை பெற்ற ராஜ்குமாரி அவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டார். முதலில் தங்கையை அடையாளம் காண முடியாத பால்கோவிந்த், பின்னர் அவரையும் குடும்பத்தினரையும் வீடியோ காலில் பார்த்து கதறி அழுதார்.

திருமணத்துக்குப் பிறகு ராஜ்குமாரி தனது கணவருடன் உத்தர பிரதேசத்தின் கான்பூரில் வசித்து வருகிறார். கடந்த 20-ம் தேதி பால் கோவிந்த், கான்பூருக்கு சென்று தங்கை ராஜ்குமாரியையும் உறவினர்களையும் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in