Last Updated : 06 May, 2018 01:10 PM

 

Published : 06 May 2018 01:10 PM
Last Updated : 06 May 2018 01:10 PM

‘‘தமிழ் தொன்மையான மொழி’’ - குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி கருத்து பலன் தருமா?

தொன்மையான மொழி தமிழ் என பல ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்கப்பட்ட பின்பும் அதை, சமஸ்கிருத அறிஞர்கள் இன்றுவரை ஏற்பதில்லை.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 16-ல் மாணவர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, நேற்று (மே 5) சென்னையில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகிய இருவருமே ’தமிழ் தொன்மையானது’ என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். இதன்மூலம், அவ்விரு மொழிகளுக்கும் இடையிலான கருத்துமோதல் முற்றுபெறுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. அதற்குமுன் பிரச்சினையின் சுருக்கத்தை காண்போம்.

சமஸ்கிருதத்தின் முதல் உதாரணமாக ரிக்வேதம் கூறப்படுகிறது. வேதங்கள் துவக்கக் காலத்தில் வாய்மொழியால் பரப்பப்பட்டதே தவிர எழுதப்படவில்லை. எழுத்து வடிவமாக வேதங்கள் உருப்பெற்ற காலம் குறித்த வரலாற்று சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே, எழுத்துக்களாக கிடைக்காத வாய்மொழியாக இருந்ததை மட்டும் வைத்து அது பழமையானது எனக் கூற முடியாது. நம் நாட்டில் கிடைத்த முதல் எழுத்துக்கள் கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயமாகும் இதை நாணய அச்சுக்கூடத் தலைவரான ஜேம்ஸ் பிரின்ச் எனும் ஆங்கிலேயர் கண்டுபிடித்து அதற்கு ‘பிராமி’ எனப் பெயரிட்டார்.

வேதகாலத்தில் பிரம்மன் படைப்புகளின் தலைவன் என்பதால் முதன்முதலில் கிடைத்ததை பிராமி எனப்பட்டது. பிராக்கிருத மொழியான இது கி.மு 4-ஆம் நூற்றாண்டில் அசோகர் ஆட்சியில் மக்கள் சொல்மொழியாக இருந்துள்ளது. அசோகரின் ஒரு கல்வெட்டில் சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர், கேரளபுத்திரர் ஆகியோர் தம் அண்டைபகுதியினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைவைத்து, அசோகரின் சமகாலத்தினரான அவர்களின் வழக்குமொழி தமிழாகவும், எழுத்துக்கள் ’தமிழ் பிராமி’யாகவும் கருதப்படுகிறது. சமஸ்கிருதக் கல்வெட்டு இந்தியாவில் முதன் முதலாக கி.பி 1 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹத்திபாடாவில் கிடைத்தது. அதே காலத்தின் மற்றொரு சமஸ்கிருத கல்வெட்டு குஜராத்தின் ஜுனாகரில் கிடைத்தது. இவைதான் சமஸ்கிருத எழுத்துக்களின் முதல் ஆதாரங்கள் தவிர அதற்கு முன்பாக எதுவும் கிடைக்கவில்லை.

1882 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகிலுள்ள மாங்குளத்தில் ராபர்ட் சீவல் கி.மு 5 ஆம் நூற்றாண்டின் ஒர் கல்வெட்டை கண்டுபிடித்தார். 42 ஆண்டுகளுக்கு பின் மொழி அறிஞர் கே.வி.சுப்பரமணிய ஐயர் அதை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டார். அவர், ’அசோகரின் பிராமியில் உள்ளது போன்ற அடிப்படை எழுத்துக்கள் தமிழ் கல்வெட்டில் இருந்தாலும், வர்க்க எழுத்துக்கள் இல்லை. குறிப்பாக எந்த மொழிகளிலும் இல்லாத தமிழுக்கே உரிய மெய் எழுத்துகளான, ள, ழ, ற, ன ஆகியவை குறியீடுகளாக உள்ளன’ எனத் தெரிவித்தார்.

இதில், சமஸ்கிருத மற்றும் பிராக்கிருத மொழியின் எழுத்துக்கள் சில தமிழில் இருப்பதால் அது ‘தமிழ் பிராமி’ எனப்பட்டது. ஆனால் தமிழ் வரலாற்றாளர்கள் அது அசோகர் பிராமிக்கும் காலத்தால் முந்தைய கல்வெட்டு என்பதால் அதை ‘தமிழி’ என அழைக்கும்படி வற்புறுத்தினர். எனினும், தமிழகத்தின் சமஸ்கிருதம் அறிந்தவர்கள் உட்பட வடமாநிலங்களின் பேராசிரியர்களும் இதை வெளிப்படையாக ஏற்பதில்லை. அப்போது முதல் சமஸ்கிருதம், மற்றும் தமிழ் ஆகியவற்றில் பழமையானது எது? என்ற சர்ச்சை துவங்கியது.

ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்யா, போலீஷ், லத்தீன், கிரீக் உட்பட பல மொழிகளுடன் சமஸ்கிருதத்திற்கு ஒற்றுமை உள்ளதால் அவை அனைத்தும் ஆரியக் குடும்பத்தை சேர்ந்தவையாக கருதப்படுகிறது. இதை ’இந்தோ-ஐரோப்பா மொழி’ எனவும் கூறுவர். ’சமஸ்கிருதம் தேவர்களால் பேசப்பட்ட மொழி எனவே அது ஒரு தேவமொழி’ எனவும் பேசப்படுகிறது. சமஸ்கிருத அறிஞரும் சுதந்திரப்போராட்ட வீரருமான சி.அரவிந்தர் கூறிய கருத்தை ஏற்கும் பல நடுநிலை மொழி அறிஞர்களும் உள்ளனர்.

புதுச்சேரியின் அரபிந்தோ ஆசிரமத்தின் நிறுவனரான அவர், ’சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டும் தனித்தனி குடும்பங்களை சேர்ந்தவை. ஆனால், இந்த இரண்டிற்கும் பொதுவான ஒரு மொழிக் குடும்பம் இருந்திருக்க வேண்டும். இதன் தாக்கம் தான் இருமொழிகளிலும் ஏற்பட்டுள்ளது.’ எனக் கூறி உள்ளார். எனினும், இந்துத்துவா ஆதரவு மொழி அறிஞர்கள் இதையும் ஏற்றதில்லை. அவர்கள் தொடர்ந்து உலகின் அனைத்து மொழிகளின் தாய் மொழி சமஸ்கிருதம் என மாணவர்களுக்கு போதிக்கும் நிலை நீடிக்கிறது. இதனால், பழம்பெரும் மொழி என்பது சமஸ்கிருதமா? தமிழா? எனும் சர்ச்சை முடிந்தபாடில்லை.

இந்த சர்ச்சையை மீண்டும் தகர்க்கும் வகையில் செம்மொழிப்பட்டியலில் சமஸ்கிருதத்திற்கும் முன்பாக தமிழ் சேர்க்கப்பட்டது. இதன்மூலம், தமிழ் ஒரு பழம்பெரும் மொழி என்பதை முதன்முறையாக மத்திய அரசு ஏற்றது. செம்மொழிப்பட்டியலில் இடம்பெற முக்கியத் தகுதியாக 2500 ஆண்டு பழமை வாய்ந்த மொழியாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப தமிழை அதில் சேர்க்க கல்வெட்டு உட்பட பல ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. ஆனால், சமஸ்கிருதத்தை சேர்க்கும் முயற்சி அப்போது எடுக்கப்படவில்லை. தமிழ் சேர்க்கப்பட்டு 2004-ல் அரசு உத்தரவு வெளியிடப்படும் போது செம்மொழிக்கான தகுதி 1500 ஆண்டு பழமையானதாக குறைக்கப்பட்டிருந்தது.

 

 

இதற்கு மறுவருடமே சமஸ்கிருதமும் செம்மொழி பட்டியலில் சேர்க்கப்பட்டதால் சர்ச்சை தொடர்ந்தது. இந்தியாவின் மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவின் முக்கியப் பதவி வகித்தவர்கள் பி.ஆர்.சீனிவாசன், எம்.டி.சம்பத் மற்றும் கே.வி. இரமேஷ் ஆகியோர். தமிழ் மற்றும் சமஸ்கிருத அறிஞர்களான இவர்கள் தமிழே காலத்தால் முற்பட்டது என தம் ஆய்வுகளில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளனர். இதில் மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்விதழில் வெளியான, ‘தமிழ் மொழி காலத்தால் தொன்மையானது அதன் எழுத்து இந்திய எழுத்துக்களுக்கெல்லாம் முன்னோடி’ எனும் ரமேஷின் கட்டூரைக்கு இன்றுவரை எவரும் மறுப்பு கூறவில்லை.

இதைத் தொடர்ந்து தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் சு.இராசவேலுவும் தமிழ் தொன்மையானது என கல்வெட்டு ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். சமீபத்தில், புதுச்சேரி மத்திய பல்கலையின் பேராசிரியர் ராஜன் செய்த அகழ்வாய்வுகளில் எழுத்துக்களுடன் கிடைத்த மட்கலன் உள்ளிட்ட பொருள்கள் கிடைத்தன.

இவற்றின் காலத்தை கண்டுபிடிக்க பொருந்துதல் (Carbon Dating) ஆய்விற்கு அமெரிக்கா அனுப்பப்பட்டது. அதில், அவை கி.மு 5-ஆம் நூற்றாண்டு வரை சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. இதுபோன்ற, ஆதாரங்கள் ஏதுமில்லாத நிலையிலும் சமஸ்கிருத அறிஞர்களும், இந்துத்துவா ஆதரவாளர்களும் தமிழை தொன்மையான மொழி என ஏற்பதில்லை.

பழமையான மொழிகளில் இன்னும்கூட புழக்கத்தில் இருப்பது தமிழ் மட்டுமே. வேதகாலத்திற்கு இணையான எழுத்துக்கள் தமிழில் கிடைக்காமைக்கு கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் காரணமாக இருக்கலாம். இதன் பழம்பெருமை பற்றி தற்போது பேசிய பிரதமரும், குடியரசு தலைவரும், இந்துத்துவா குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கூறியது அரசியல் கருத்து என்பதால் ஏற்கவேண்டிய கட்டாயம் இல்லை என சமஸ்கிருதப் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

இருமொழிகளின் அறிஞர்களை ஒன்றிணைத்து மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை தற்போதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். பிறகு அதை நாட்டின் பள்ளி, கல்லூரி பாடங்களில் அறிமுகப்படுத்த வேண்டும். அப்போது தான் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லை எனில் பிரதமருடன், குடியரசு தலைவரின் கருத்தும் அரசியல் லாபத்திற்கானது மட்டுமே எனக் கருதப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x