“லடாக்கில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு நினைவில் கொள்ளும்” - ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Updated on
1 min read

புதுடெல்லி: “பயிற்சியின் போது ஆற்றில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாடு அவர்களின் தியாகத்தை, அர்ப்பணிப்பை எப்போதும் நினைவில் கொள்ளும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ராணுவப் பயிற்சியில் டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வீரமரணம் அடைந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர் மிகு தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணி அளவில் டேங்கர் மூலம் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 5 ராணுவ வீரர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in